Thursday, October 08, 2015

சிட்டு குருவிகள் எங்கே போயின

நன்விஜய் பிரசாத்

நேற்று ஒரு பதிவில் Bird feeder இருப்பதை பார்த்து சிட்டு குருவிகள் எங்கே போயின என்று இணையத்தில் படிக்க தொடங்கினேன்.
சிட்டுக்குருவிக்கு மருத்துவ குணங்கள்( சிட்டு குருவி லேகிய மேட்டர்) இருக்கின்றன எனும் தவறான நம்பிக்கைகளால் இவை பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றனவாம்.
* நகரங்களில் கட்டிட அமைப்புகள் மாறி ஜன்னல், தாழ்வாரம், முற்றம் போன்றவை மறைந்து, கண்ணாடி சூழப்பட்ட குளிர்வறைகளாக மாறி வருவதால் மனிதர்களுடனே சேர்ந்து வாழ்ந்த குருவிகளுக்கு இருப்பிடமின்றிப் போய்விட்டதாம்
* சிறு மளிகைக் கடைகள் மறைந்து. பல்பொருள் அங்காடிகளாக மாறுவது அவற்றிற்கு சிந்தும் தாணிய உணவு கிடைக்க வழியில்லாமல் செய்து விடுகிறதாம்,
* மேலும் நகரங்கள், மரம், செடி, கொடி போன்றவைகளை இழந்து கான்க்ரீட் காடுகளாகி வருவது குருவிகள் வாழ்விற்கு ஏற்றதாக இல்லையாம்.
* குளம், குட்டை போன்றவை மறைந்ததால் தண்ணீர்ப் பற்றாக்குறையும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
* ஒலி மாசும் ஒரு பெரிய எதிரியாக சொல்லப்படுகிறது.
* அலைபேசிக் கம்பத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சினாலும் சிட்டுக் குருவிகள் பாதிக்கப்படுகின்றனவாம்.
* கிராமங்களில் விவசாய நிலங்கள் குறைவதால் சிட்டுக் குருவிகளின் முக்கிய உணவான தானியங்கள் கிடைப்பது அரிதாகி இவை அழிகின்றனவாம்.
* பெட்ரோலில் இருந்து வெளியேறும், 'மீத்தைல் நைட்ரேட்' எனும் ரசாயனக் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் அழிகின்றனவாம்.
* இவையெல்லாவற்றையும் விட சிட்டுக் குருவிகள் அழிவிற்கு முக்கிய காரணியாக விளங்குவது நாம் கணக்கின்றிக் கொட்டும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தானாம். DDT என்ற பூச்சிக்கொல்லி மருந்து தானியங்களுக்குத் தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக் குருவிகள் இறக்க நேரிடுகிறது எனப் பல பறவையியலாளர்கள் சொல்கின்றனர்.
தற்போது இதை உணர்ந்து சிட்டுக் குருவிகள் அழிவை தடுக்க பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் இவற்றிற்கு தானியங்கள், நீர் வைக்க பரிந்துரைக்கப் படுகிறது. இவைகளுக்கு சிறு அட்டைப் பெட்டி, மரத்தாலான வீடுகளும் அமைக்கப்படுகிறது.

சிட்டுக்குருவி பற்றிப் பேசும் போது நேச்சர் பார் எவர் சொசைட்டியின் (Nature Forever Society) நிறுவனர் முகமது திலவார் (Mohamed Dilawar) பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிட்டுக்குருவியினத்தைக் காப்பாற்றத் தம் முழு நேரத்தையும் அர்ப்பணித்திருக்கும் இவர் துவங்கிய 'நம் சிட்டுக்குருவியைக் காப்பாற்றுவோம்,' (SAVE OUR SPARROWS) (SOS) என்ற விழிப்புணர்ச்சி இயக்கம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. புர்ஹானி பவுண்டேஷனுடன் (Burhani Foundation (India) இணைந்து 52000 பறவை உணவளிப்பான்களை உலகமுழுதுக்கும் வழங்கியிருக்கிறார். இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இணைப்பு:- http://www.natureforever.org/
.
ஓசூர் அடுத்த, கும்மாளாபுரம், கொத்தகொண்டப்பள்ளி, முத்ததுார், தளி சுற்று வட்டார பகுதிளில் உள்ள மொத்தம், 236 கிராமங்களில் அட்டை கூடுகள் வைக்க திட்டமிட்டு தற்போது, 80 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், ஆனைக்கல் பகுதியில், 44 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு இதில், 20 கிராமங்களில் அட்டை கூடுகள் வைக்கப்பட்டள்ளது. இந்த முயற்சியால் தற்போது, 10 ஆயிரம் வீடுகளில் சிட்டு குருவிகள் வாழ்வதற்கு வசதியாக அட்டை கூடுகள் வைக்கப்பட்டுள்ளது.
.

No comments: