ராமபிரான் காட்டுக்கு சென்ற போது கங்கை நதியை கடக்க உதவி செய்தவன் குகன். இவன் முற்பிறவியில் வேடனாக பிறந்து மிருகங்களை வேட்டையாடி வந்தான். ஒருநாள் மிருகங்கள் ஏதும் சிக்கவில்லை. இருள் கவியத் துவங்கியது.
இரவானாலும் ஏதாவது மிருகத்தை வேட்டையாடிவிட்டுத்தான் செல்லவேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தினர் பட்டினியாக இருப்பார்கள் என்று காட்டில் அலைந்து கொண்டிருந்தான். அவனுக்கும் கடும்பசி. காலையில் இருந்தே சாப்பிடவில்லை. இருட்டிவிட்டதால் விலங்குகளிடமிருந்து தப்பிக்க ஒரு மரத்தில் மேது ஏறி அமர்ந்து கொண்டிருந்தான்.
பசி மிகும் போது தன் இடுப்பில் கட்டியிருந்த குடுவையில் இருந்து நீரை குடித்துக் கொண்டான். தூங்காமல் இருக்க வேண்டும் என்று அந்த மரத்தின் இலைகளை பிய்த்து கீழே போட்டபடியே இருந்தான். அவன் குடிக்கும் போது தண்ணீர் கீழே சிந்தியது. இப்படி விடிய விடிய விழித்து இருந்தான் அந்த வேடன்.
பொழுது விடிந்ததும் கீழே பார்த்தான். அங்கு மரத்தடியில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. அதன்மேல் வில்வ இலைகளை பறித்துப் போட்டிருந்தான் இவன். ஆனால் இவன் அதை பெரிதாக நினைக்கவில்லை. ஒரு கும்பிடு போட்டுவிட்டு சென்றுவிட்டான்.
அவன் தன்னையறியாமல் விழித்திருந்து சிவனை வழிபட்ட தினம் சிவராத்திரி தினமாகும். இதனால் அவனுக்கு சிவனின் கடாட்சம் கிடைத்தது. மறுபிறவியில் அவன் குகனாக பிறந்தான். ராமனுக்கு உதவி செய்யும் பாக்கியம் கிடைத்து. குகனோடு ஐவரானோம் என்று ராமனின் சகோதரன் என்ற நிலைக்கு உயர முடிந்தது.
தன்னை அறியாமல் கடைபிடித்த எளிய விரதத்துக்கே குகனுக்கு இந்த அளவு பெரிய பலன் கிடைத்தது. இவ்வளவு சிறப்பு மிக்க விரதத்தை சிரத்தையாக அனுஷ்டித்தால் அதன் பலனை சொல்லிட முடியா அளவிற்கு இருக்கும்.
குரங்கு ஒன்று மரத்தில் இருந்தபடி, வில்வ இலைகளை விளையாட்டாகப் பறித்துப் போட்டது. அந்த இலைகள், மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இதனால் குரங்கு சாப விமோசனம் பெற்று, குரங்கு முகமும் மனித உடலும் கொண்ட முசுகுந்த சக்கரவர்த்தியாகும் வரத்தைத் தந்தருளினார் சிவனார் என்றும் புராணத்தில் கதை உண்டு!
ஆகவே இந்த சிவராத்திரி நாளில்... நம்மால் முடிந்த அளவு வில்வங்களை சிவனாருக்கு வழங்குவோம். இதில் குளிர்ந்து போய், நம்மையும் குளிரச் செய்வார் ஈசன்!
MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 7022638881 as MyTemple and send "Hi" on Whatsapp for a free subscription in தமிழ். www.mytempleapp.com
No comments:
Post a Comment