Monday, March 07, 2016

‘கோவிந்தா... கோபாலா... கோஷம்! குமரியில் சிவாலாய ஓட்டம்!







வி.ராம்ஜி
'அரியும் சிவனும் ஒன்று' என்பதை உணர்த்தும் விழாக்களும் விசேஷங்களும் இங்கே நிறையவே உண்டு. கடைக்கோடியில் உள்ள கன்யாகுமரி மாவட்டத்தில், மகா சிவராத்திரி நாளில், 12 சிவாலயங்களை தரிசித்து வழிபடும் 'சிவாலய ஓட்டம்' என்ற நிகழ்ச்சி வெகு பிரபலம்!
   மகா சிவராத்திரியன்று பக்தர்கள் விரதம் இருந்து கன்யாகுமரி மாவட்டம் கல்குளம், திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவாலயங்களை ஓடி ஓடி தரிசிப்பதே சிவாலய ஓட்டம் என அழைக்கப்படுகிறது.
  சிவாலய ஓட்டம் எனும் வழிபாடு எப்படி வந்தது? அந்தக் கதையைப் பார்ப்போமா?
இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படி உருவம் எடுத்தார் என்பார்கள். புருஷாமிருகம் சிவபக்தன். விஷ்ணு ஆகாது. தனது எல்லைக்குள் எவரேனும் திருமால் நாமத்தைக் கூறினால், அவரைத் தாக்கிவிடும்.
'தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது!' என்று நம்பியவன் பீமன். புருஷாமிருகத்துக்கும் பீமனுக்கும் 'அரியும் சிவனும் ஒன்று'  என்பதை உணர்த்த ஸ்ரீகிருஷ்ணர் திருவுளம் கொண்டார்.
ஒருமுறை தர்மர் நடத்தும் ராஜசூய யாகத்துக்கு  புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனை அனுப்பினார். 'வைணவத்தை வெறுக்கும் புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி?' எனத் தயங்கினான் பீமன். ஆனால் கிருஷ்ணரோ, ''பயப்படாதே.  உன்னிடம் 12 ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது, ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்ததும், புருஷாமிருகம் பூஜையில் இறங்கிவிடும். அப்போது தப்பித்து விடலாம்!'' என்றார். அதன்படி, காட்டுக்குச் சென்றான் பீமன்.
திருமலையில் ஒரு பாறை மீது அமர்ந்து, சிவதவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். அப்போது பீமன், 'கோவிந்தா, கோபாலா!' என்று கூவினான். இதில் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே பீமன், ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அந்த விநாடியே ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. இதைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், 'கோவிந்தா, கோபாலா' என்று மீண்டும் குரல் எழுப்பினான்.
புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த,  பீமன் மீண்டும் ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. அந்த இடமே திக்குறிச்சி.
  இப்படி, 11 இடங்களைக் கடந்து 12&-வது இடத்தில் (திருநட்டாலம்) ருத்திராட்சத்தைப் போடும்போது, புருஷாமிருகம் பீமனைப் பிடித்தது. அவனுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன், 'உன் எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு!' என்றான். அப்போது, அங்கே வந்த தர்மரிடம் நியாயம் கேட்டார்கள். தம்பி சிக்கலில் இருப்பது தெரிந்தும், பாரபட்சம் பாராமல், 'ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால், பாதி உடல் புருஷா மிருகத்துக்கே!'' என்றார். அப்போது அங்கே தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும், 'அரியும் சிவனும் ஒன்றே!' எனும் தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜ சூய யாகம் நடக்க  புருஷாமிருகம் உதவியது.
  இந்தப் புராண நிகழ்வைக் குறிக்கும் வகையில், மகா சிவராத்திரி நாளில், 12 சிவாலய ஓட்ட தரிசனத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசி அன்று, மாலை அணிந்து, விரதம் இருப்பார்கள். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்தே எதுவும் சாப்பிடாமல், காவி உடை அணிந்து புறப்படுவார்கள்.
'கோவிந்தா... கோபாலா' எனும் கோஷமிட்டபடி  குமரி மாவட்டம் திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் துவங்குவர். இப்படியாக ஓடி 12 ஆலயங்களையும் தரிசிப்பார்கள்.

No comments: