Friday, February 10, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி!....

🌀 மகாபாரதத்தில் தேரோட்டியாக வந்து அர்ஜூனனுக்கு அறிவுரை சொன்ன கிருஷ்ணரின் அவதாரமான பார்த்தசாரதியின் கோவில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது.
தல வரலாறு :
🌠 திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்ற மன்னனுக்கு, பெருமாளை குருக்ஷேத்ர போரில் தேரோட்டியாக வந்த கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.
🌠 தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம் வேண்டினார். சுவாமியும் தேரோட்டியாக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் தங்கும்படி வேண்டவே, பாரதப் போரில் அர்ஜூனனுக்கு சாரதியாக இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமாள், ஆயுதம் எதையும் எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார்.
🌠 பாரதப்போரில் அர்ஜூனன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகளையெல்லாம் தானே முன்னின்று ஏற்றுக் கொண்டு அர்ஜூனனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்ததை விளக்கும் வகையில் இன்றும் பார்த்தசாரதி முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் காணப்படுகின்றன.
🌠 இத்தலத்து உற்சவர், பார்த்தசாரதி ஆவார். பிற்காலத்தில் இவர் பிரசித்தி பெறவே, இவரது பெயரில் கோவில் அழைக்கப்பட்டது.
🌠 வியாச முனிவரால் இங்கே இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்கிறது ஸ்தல புராணம். இங்கு காணப்படும் மூலவர் திருமேனியே, கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது. நின்றான் திருக்கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர் இவரே மூலவர். அமர்ந்தான் கோலத்துக்கு தௌ;ளியசிங்கர் என்ற ஸ்ரீநரசிம்மர். கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் எனப்படும் ஸ்ரீரங்கநாதர். இந்த மூன்று நிலைகளுமே வீரம், யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்கின்றன.
தலச் சிறப்பு :
🌠 108 வைணவ திவ்ய தேசங்களுக்குள் 61-ம் திவ்ய தேசமாகப் போற்றப்படும் பார்த்தசாரதி கோவில் மூலவர் ஒன்பது அடி உயரமானவர்.
🌠 வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத அதிசயமாகப் பெருமாள் இங்கே வெண்மீசைக்காரராகக் காணப்படுகிறார்.
🌠 பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இங்கே இரண்டு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். மனித வடிவில் கிருஷ்ணனாகப் பிறந்ததால் இரண்டு கைகள் மட்டுமே அவருக்கு உண்டு.
🌠 பிருகு முனிவரின் மகளாகப் பிறந்த வேதவல்லித் தாயாருக்கு இந்தக் கோவிலில் தனிச் சன்னிதி உள்ளது. பிருகு முனிவரின் வேண்டுதலுக்கிணங்க அப்படி அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேதவல்லித் தாயார் தனிச் சன்னிதியில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.
🌠 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பஞ்ச மூர்த்தித்தலம். இங்கு வேங்கட கிருஷ்ணர், ரங்கநாதர், ராமபிரான், கஜேந்திர வரதர், யோக நரசிம்மர் என்று ஐந்து சன்னிதிகளும் பிரதானமாக இருக்கின்றன. திருக்கச்சிநம்பி, வேதாந்தச்சாரியார், ராமானுஜர், மணவாளமாமுனிகள், சக்கரத்தாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் சன்னிதிகள் பிராகாரத்தில் இருக்கின்றன.
பிரார்த்தனை :
👉 பார்த்தசாரதி திருக்கோவிலில் குடி கொண்டுள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். பார்த்தசாரதி பெருமாளை வேண்டினால் கல்யாணம், குழந்தை, குடும்ப ஐஸ்வர்யம் ஆகிய வரங்களை அள்ளி அருளுபவர் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
ஓம்நமோ நாராயணாய நமஹ

No comments: