Monday, March 06, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோவில்!...

🌠 ஸ்ரீவேதநாராயண பெருமாள், ஸ்ரீவேதநாயகித் தாயார் உலகையே ரட்சித்து, ஞானம் வழங்கி அருளும் அற்புதமான இத்தலம் தொட்டியம் வட்டம், திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சுவாமி : வேதநாராயணபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி
அம்பாள் : வேநாயகி தாயார்
மூர்த்தி : அனுமன், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஆண்டாள்.
தீர்த்தம் : காவிரி
தலவிருட்சம் : வில்வம்
தல வரலாறு :
🌠 மகாபலிச் சக்கரவர்த்தி மைசூரை நோக்கிப் படையெடுத்துச் செல்லும் வழியில் மண்மேடாக இருந்த இடத்தில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். அப்போது மன்னன் கனவில் தோன்றிய பெருமாள், இங்கே பூமிக்கு அடியில் இருக்கும் என்னை மேலே எழுந்தருளச் செய்து, கோவில் எழுப்பு 'உனக்கு ஜெயம் உண்டாகும்" என அருளினார். மன்னர், விடிந்ததும் பெருமாளின் திருவிக்கிரகத்தைப் பூமியில் இருந்து எடுத்து, பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து வழிபட்டுச் சென்றார்.
🌠 வேதநாராயணபெருமாள் திருக்கோவிலுக்காக அங்கே ஒரு கிராமத்தை உருவாக்கி, அதற்குத் திருநாராயணபுரம் என்று பெயர் சூட்டி, கிராமத்தையும் நிலங்களையும் தானமாக அளித்துவிட்டுச் சென்ற பிறகு மைசூரை வென்றார்.
தல வரலாறு :
🌠 வேதநாராயணபெருமாள் திருக்கோவில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. ஸ்ரீகம்பத்தடி அனுமன், ஸ்ரீகருடாழ்வார் ஆகியோரைத் தரிசித்தபடி உள்ளே சென்றால் ஸ்ரீவேதநாராயணரைத் தரிசிக்கலாம்.
🌠 சிவனுக்கு உகந்த வில்வ மரத்தடியில் பெருமாளின் திருவடிகள் உள்ளது. அருகில் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறாள்.
🌠 நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளி கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார் ஸ்ரீதிருமால் என்பது ஐதீகம்.
🌠 பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் ஸ்ரீபூதேவியும் இருக்கிறார்கள். கீழே பிரகலாதன் மூன்று வயதுக் குழந்தை வடிவில் அழகாக காட்சித் தருகிறார்.
🌠 பிரமன், பிரகலாதன், சுக்கிரீவன், கருடன், அனுமன், ஆரையர், சோழர் முதலியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம். இத்தலம் ஆதிரங்கம் அதாவது முதல் ரங்கம் என்று போற்றப்படுகிறது.
🌠 புகழ் பெற்ற வைஷ்ணவ தலமான ஸ்ரீவேதநாராயண பெருமாள் தலத்தில் வைகாசி மாதம் தேரோட்டம் நடைபெறும். எம்பெருமாள் உபயநாச்சியாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை :
🌠 27 அகல் தீபமேற்றி, நம் ஜாதகத்தைப் பெருமாளின் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும்.
🌠 ஐந்து நெய் விளக்கேற்றி, வெண்தாமரை மலரால் அர்ச்சித்து வழிபட, கல்வி மேம்படும், தொழில் விருத்தியாகும், வியாபாரம் செழிக்கும் என்றும் பக்தர்களின் நம்பிக்கை.
ஓம் நமோ நாராயணாய

No comments: