ஏழுக்கும் மயிலைக்கும் தொடர்பு!
- வி.ராம்ஜி(MyTemple team)
பொதுவாகவே, ஏழு என்ற எண்ணுக்கும் இந்து மதத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. ஏழு ஜென்மம் என்பார்கள். ஏழு புண்ணிய நதிகள் என்பார்கள். ஏழு ஸ்வரங்கள் என்று இசையைச் சிலாகிப்பார்கள். சப்த முனிவர்களுக்கு புராணத்தில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
தஞ்சைக்கு அருகில் சப்த ஸ்தான ஸ்தலங்கள் என்று உள்ளன. அதேபோல் சப்த மங்கை திருத்தலங்கள் என்று அமைந்திருக்கின்றன. திருவாரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள தியாகாராஜர் குடிகொண்டிருக்கும் தலங்களை, சப்த விடங்க தலங்கள் என்று போற்றுவார்கள்.
அதேபோல், ஏழுக்கும் மயிலாப்பூர் தலத்துக்கும் தொடர்புகள் பல உண்டு. ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீவெள்ளீஸ்வரர், ஸ்ரீகாரணீஸ்வரர், ஸ்ரீமல்லீஸ்வரர், ஸ்ரீவிருபாட்சீஸ்வரர், ஸ்ரீவாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய சிவாலயங்கள் இங்கே அமைந்துள்ளன. இந்த ஏழு சிவன் கோயில்களும் அருகருகே உள்ளன. இந்தக் கோயில்களை முறையே ஒரேநாளில் தரிசிக்கலாம். அப்படித் தரிசித்தால், சகல வினைகளும் தீரும். முக்தி பெறலாம் என்பது ஐதீகம்! இத்தனைப் பெருமைக்கு உரிய தலம் என்பதால்தான், கயிலையே மயிலை, மயிலையே கயிலை எனும் பெருமை பெற்றது இந்தத் திருத்தலம். அதாவது திருக்கயிலாயத்துக்கு இணையானது மயிலாப்பூர் தலம்!
அதேபோல் மயிலாப்பூரில் ஏழு பெருமாள் கோயில்கள் உள்ளன. மயிலாப்பூர் கோயிலுக்கு அருகில் உள்ள திருக்குளம் உட்பட ஏழு திருக்குளங்களும் உள்ளன. கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், கடல் தீர்த்தம் (கடவுள் தீர்த்தம் என்பார்கள்), ராம தீர்த்தம் என ஏழு தீர்த்தங்களைக் கொண்டது மயிலாப்பூர்.
No comments:
Post a Comment