Saturday, July 09, 2011

பஞ்ச கேதார் யாத்திரை!




இமயத்திலுள்ள கேதார்நாத், மத்ய மகேஸ்வர், துங்கநாத், கர்பேஸ்வர், ருத்ரநாத் ஆகிய ஐந்து பெருமைமிக்க சிவஸ்தலங்களை தரிசிப்பதே பஞ்ச கேதார் யாத்திரை எனப்படுகிறது.


மகாபாரதப் போரில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் சிவபெருமானை வழிபட கேதார்நாத் வந்தார்கள். பாண்டவர்களைக் கண்ட சிவபெருமான் நந்தியாக உருமாறினார். நந்தி வடிவத்தில் இருந்த சிவபெருமானைப் பாண்டவர்கள் அறிந்து கொண்டார்கள். உடனே நந்தி வடிவத்திலிருந்த சிவபெருமான் தனது கொம்பால் பூமியைப் பிளந்து மறைவதற்கு முயற்சி செய்தார். இதனைக் கண்ட பீமன் நந்தியோடு போராடினான். போராட்டத்தில் நந்தியின் உடலைத் தனித்தனியாகக் கிழித்து எறிந்தான். பீமனால் வீசி எறியப்பட்ட நந்தியின் அங்கங்கள் இமயத்தில் ஐந்து இடங்களில் விழுந்தன. அவையே இந்த ஐந்து ஸ்தலங்கள்.


மந்தாகினி நதிக்கரையோரத்திலுள்ள கௌரி குளத்தின் அருகே பிரம்மாண்டமான கேதார்நாத் கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயம் அந்தக் காலத்து கட்டயூரி (ஃர்ற்ற்ஹஹ்ன்ழ்ண்) வடிவமைப்பில் அமைந்துள்ளது. கோவிலின் கூரைகள் தேக்கு மரங்களால் வேயப்பட்டுள்ளது மிகவும் விசேஷமா னது. கேதார்நாத்தில் நந்தியின் (சிவபெரு மானின்) கழுத்துப் பகுதி விழுந்ததால், கோவிலின் பிரதான சந்நிதியில் நந்தி பகவான் கழுத்து பாகம் வரை மட்டுமே தெரியும் வண்ணம் மிகச் சிறப்பா கக் காட்சி கொடுக்கிறார்.


மத்யமகேஸ்வர் கோவிலில் மக்கள் சிவபெருமானின் வயிற்றுப்பகுதியை வணங்குகிறார்கள். கேதார்நாத்திலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உகிமத் (மந்ண்ம்ஹற்ட்) என்ற இடத்திலிருந்து வடகிழக்கு திசையில் 25 கிலோ மீட்டர் தொலைவு சென்றால் குப்தகாசி என்ற இடத்தை அடையலாம். குப்தகாசியிலுள்ள காளிமத் (ஃஹப்ண்ம்ஹற்ட்) என்ற இடத்தில் மத்யமகேஸ்வர் கோவில் அமைந் துள்ளது. கோவில் நுழைவாயிலில் நந்தி பகவான் காட்சி கொடுக்கிறார். அடுத்து சிவபெருமான் பார்வதி தேவியோடு அருள்புரியும் சந்நிதியும் உள்ளது.


உகிமத்திலிருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில், பத்ரிநாத் செல்லும் வழியில் துங்கநாத் சிவஸ்தலம் உள்ளது. துங்கநாத் கோவிலில் சிவபெருமான் ஒரு அடி உயரத் தில் கருப்பு நிறமுடைய சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். துங்கநாத் கோவிலில் பீமனால் வீசி எறியப்பட்ட நந்தியின் புஜங்கள் விழுந்ததால், இங்குள்ள பிரதான சந்நிதியில் சிவபெருமான் புஜங்களோடு வெகு அழகாக தரிசனம் தருகிறார். இந்தக் கோவிலில் பார்வதி தேவிக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இந்த இடத்தில்தான் ராவணன் சிவபெருமானை நினைத்துத் தவம் செய்தான் என்று ராமாயணம் கூறுகிறது.


நந்தியின் (சிவபெருமானின்) ஜடை மட்டும் கர்பேஸ்வர் கோவிலில் விழுந்ததால், இங்கு சிவபெருமான் ஜடையோடு தரிசனம் கொடுக்கிறார். இங்கு சிவபெருமான் "ஜடாதாரி' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். கர்பேஸ்வர் கோவில் "உர்கம்' (ன்ழ்ஞ்ஹம்) என்ற பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரதான சந்நிதி யில் கருப்பு நிறத்தில் நந்தி பகவான் தரிசனம் கொடுக்கிறார். மேலும் இந்தக் கோவிலில் அனுமன், விநாயகர் சந்நிதிகளும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


சிவபெருமானின் ஐந்தாவது அங்கமான முகம் மட்டும் ருத்ரநாத் கோவிலில் விழுந்ததால், இங்கே அழகிய முகத்தோடு சிவபெருமான் காட்சி தருகிறார். இந்தக் கோவிலிலும் சுயம்பு


லிங்கம் இடம் பெற்றுள்ளது. இடப்புறத்தில் ஐந்து சிறிய


லிங்கங்கள் உள்ளன. வலப் புறத்தில் சரஸ்வதி தேவி சந்நிதி உள்ளது. இது இந்தக் கோவிலின் சிறப்பு அம்சமாகும்.


பஞ்ச கேதார் யாத்திரை கேதார்நாத்திலிருந்து தொடங்கி மத்யமகேஸ்வர், துங்கநாத், கர்பேஸ்வர், ருத்ரநாத் என்று ஐந்து சிவ ஸ்தலங்களைக் கொண்டது. ருத்ரநாத் கோவிலின் அருகே சூர்ய குளம், சந்திர குளம், நட்சத்திரக் குளம் என்று மூன்று விசேஷமான குளங்களில் நீராடலாம். ருத்ரநாத் கோவிலின் அருகே வைதாரிணி என்ற நதியும் ஓடுகிறது. மறைந்த ஆத்மாக்கள் பூலோகத்திலிருந்து தேவலோகத்திற்குச் செல்லும்போது இந்த நதியைக் கடந்து செல்வதாகச் சொல்கிறார்கள்.


பஞ்ச கேதார் யாத்திரை மனதிற்கு அமைதி யைக் கொடுத்து, தெளிவான சிந்தனையை வளர்க்கிறது. பாவங்களைப் போக்கி இறை ஞானத்தைக் கூட்டுகிறது. இத்தகைய சிறப்பு அம்சங்களைக் கொண்ட பஞ்ச கேதார் சிவ ஸ்தலங்களைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

துங்கநாத் கோவிலில் பீமனால் வீசி எறியப்பட்ட நந்தியின் புஜங்கள் விழுந்ததால், இங்குள்ள பிரதான சந்நிதியில் சிவபெருமான் புஜங்களோடு வெகு அழகாக தரிசனம் தருகிறார். //

பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.