Wednesday, March 05, 2014

சுக வாழ்வு நல்கும் சூரியனார் கோயில் - சூரிய பகவான்


                   



 


மனித வாழ்வின் இன்ப துன்பங்கள்,மனித உடல் மற்றும் உள்ளத்தின்  செயல்பாடுகள் அனைத்துக்கும் சூரியன் முதலான ஒன்பது கிரகங்களே காரணம்.
சூரியனிடமிருந்து ஆற்றல்மிகு கதிர்வீச்சு தொடர்ந்து குரு,சனி,சுக்கிரன்,செவ்வாய்,புதன் மற்றும் சந்திரன் ஆகிய ஆறு கோள்களின் மீதும் அளவற்ற வேகத்துடன் மோதிப்பிரதிபலித்து பின்பு பூமியையும் தாக்குகின்றன.அக்கதிர்கள் மனித உடலிலும்,உள்ளத்திலும், மூளை நரம்புகளிலும் பலவித மாற்றங்களை நிகழ்த்துகின்றன. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரையும் பாதிக்கின்றன.
உடல் தொடர்பான இன்ப, துன்பங்களை சூரியன் , சுக்கிரன், செவ்வாய், ராகு ஆகிய கிரகங்கள் நிர்ணயிக்க, மனம் தொடர்பான இன்ப, துன்பங்களைச் சந்திரன், புதன், கேது, ஆகியவை தீர்மானிக்கின்றன. குரு,சனி ஆகிய இரண்டும்  உடல், உள்ளம் இரண்டிலுமே ஆதிக்கங்கள் செலுத்துகின்றன.
நவ நாயகர்களும் தம்மை வழிபடுகிறவர்களுக்கு நற்பலன்களை அருளுகின்றனர். பரிகாரம் செய்து வழிபடுபவர்களுக்குத் தீய பலன்களை தணிவிக்கின்றனர்
தஞ்சை மாவட்டத்தில் நவகிரக நாயகர்களில் சிலர் தங்களுக்கென தனிக்கோவில் கொண்டு கோலோச்சுகின்றனர். சிலர் தங்களுக்கென தனி முக்கியத்துவம் கொண்டு துலங்குகின்றனர்.
இந்த நவகிரகத்தலங்களுக்கும் சென்று அங்கே எழுந்தருளியிருக்கும் நவகிரக நாயகர்களை தரிசிக்க உள்ளோம் அதில் முதலாவதாக 

 

சூரியனார் கோயில் சூரியபகவான்

 

 

 காஷ்யப முனிவருக்கும் அவரது மனைவி அதிதிக்கும் விசுவவான் முதலான பன்னிரண்டு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் முதலாமவராகிய விசுவவான் தான் சூரிய பகவான் என்று சூரியனின் பிறப்பைப் பற்றி புராணங்களில் ஒன்று புகழ்கிறது.

 

ஆதியில் இருள் மயமாக இருடந்த அண்டத்தை பிரம்மதேவன் பிளந்தார், அப்போது  ஓம் என்ற பேரொலி எழுந்த்து. அவ்வொலியிலிருந்து, ஒளி உருட்கொண்டு சூரியன் தோன்றினார் என்று சூரியனைன் பிறப்பைப்பற்றி மார்கண்டேய புராணம் இன்னொரு விதமாகவும் எடுத்துரைக்கிறது.

சூரிய பகவான் துவஷ்டாவின் மகளான சஞ்ஞீகை என்னும் உஷாவை மணந்தார். அவர்களுக்கு வைத்சுதமனு, யமன், அசுவினி தேவர்கள் ஆகியோர் பிறந்தனர்.

சூரியனின் வெப்பத்தை மென் பெண்ணான சஞ்ஞீகையால் தாங்க இயலவில்லை. எனவே அவள் தனது நிழலையே ஒரு பெண்ணாக  உருச் செய்தாள். அவளைத் தனக்குப் பதிலாக சூரியனிடம் அவரறியாமல் இருக்கச் செய்து தாய் வீடு சென்றாள்.

சஞ்ஞீகையின் நிழலாகத் தோன்றிய திருமங்கையின் பெயர் சாயாதேவி என்னும் பிரத்யுஷா, சாயாதேவி தன்னைப் பற்றிய உண்மையை உரைக்காமலேயே ஆதித்தனுடன் அமர வாழ்கை வாழ்ந்து வந்தாள். அவர்கள் இருவருக்கும் சாவர்ணிமனு, சனி என்ற மகன்களும் பத்திரை என்ற மகளும் பிறந்தனர்.

தனது மகன் யமன் மூலம் உண்மை அறிந்த சூரியன், உஷாவின் தந்தையான துவஷ்டாவிடம் சென்று உஷாவின் இருப்பிடத்தை அறிந்து அங்கே விரைந்தார். அடர்ந்த காட்டில் பெண் குதிரை உருவத்தில் உஷாதேவி தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். அவளிடம் பேசி அன்போடு அழைத்து வந்து அவளின் இசைவுயுடன்  இருவரோடும், இன்புடன் இல்லறம் செய்தார், இவ்விரு தேவிகளே சூரியனை விட்டு என்றும் அகலாதிருந்து அருள் பாலிக்கிறார்.

கும்பகோணத்துகு அருகில் அமைந்துள்ள திருமங்கலங்குடி என்ற ஊரில் பிராணநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற இந்தத்  தலத்துக்கு வடகிழக்கில் சூரியனார்  கோயில் அமைந்துள்ளது.

 கோயில் தேர் வடிவில் அமைந்துள்ளது. கர்ப்ப கிரகத்தின் மேலே உள்ள விமானத்தின் நான்கு மூலைகளில் குதிரைச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. விமானத்தைச் சுற்றி பன்னிரு சூரியர்கள் அமர்ந்த நிலையில் உள்ளனர்.

மஹாமண்டபத்திலிருந்து அர்த்த மண்டபத்திற்குள் நுழையும் வாயிலின் தெற்கு புறத்தில் தண்டியும், வடக்குப்புறத்தில் பிங்கலனும் துவார பாலகர்களாகக்காவல் புரிகின்றனர்.

துவாரபாலகர்களுக்குச் சற்று தள்ளி, கருவரையிலிருக்கும் மூலவரான சூரியதேவரை நோக்கியபடி அவரது வாகனமான அசுவம் அமைந்துள்ளது.

கருவறையில் மேற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் சூரிய பகவான் காட்சியளிக்கிறார். இடப்புறத்தில் சஞ்ஞீகை எனும் உஷாதேவி. வலப்புறத்தில் பிரத்யுஷா எனும் சாயாதேவி. இருவரும் நின்ற கோலத்தில் காட்சியருளுகின்றனர்.

உஷாதேவியின் வலக்கரத்தில் நீலோத்பல மலர். பிரத்யுஷாதேவியின் இடக்கரத்தில் தாமரைமலர் சூரியன் இருகரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்தி புன்முறுவலுடன் அருள்பாலிக்கிறார்.

வெகுபழமையான சூரியனார் கோயில் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடும் புகழ் பெற்ற தலமாகும்.

தமிழ்நாட்டில் சூரியனுக்கென்றே தனிக்கோயில் கொண்ட ஒரே தலம் இது. அதுமட்டுமல்லாது நவகிரகங்களுக்கும் தனித்தனி கோவில் அமைந்துள்ள ஒரே தலமும் இதுவே.

பிராணநாதேஸ்வர், மங்கலநாயகி சமேதரராய் எழுந்தருளியுள்ள மேற்கு பகுதி திருமங்கலக்குடி என்றும், நவகிரகங்களின் ஆலயம் அமைந்துள்ள வடகிழக்குப்பகுதி சூரியனார் கோயில் என்றும் பெயர் பெற்று இங்கே இரண்டு தலங்களாக அமைந்துள்ளன.

சூரியனார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரையும், மங்களாம்பிகையையும் வழிபட்டபின்பே சூரியனார் கோவில் சென்று வழிபடவேண்டும் என்பது ஐதீகம்,

சுவாமி சன்னதியில் நோய் நீங்க வேண்டிக்கொள்பவர்களுக்கு ஞாயிற்றுகிழமை மதியம் உச்சிகால பூஜையின் போது வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அம்பாள் சன்னதியில் மங்களாம்பிகையின் திருக்கரங்களிலிருந்து திருமாங்கல்யச்சரடு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திருத்தலக்குறிப்புகள்

தலத்தின் பெயர் :  திருமங்கலக்குடி சூரியனார் கோயில் 

சுவாமியின் திருநாமம் : சூரியபகவான் 

எங்கே உள்ளது : தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகில்

எப்படிச்செல்வது : சென்னையிலுருந்தும்-கோவையிலிருந்தும் கும்பகோணத்துக்கு ரயில் மற்றும் பேருந்து  வசதி உள்ளது, கும்பகோணத்திலிருந்து ஆட்டோ, கார் அல்லது பேருந்து மூலம் கோவிலைச்சென்றடையலாம்.

எங்கே தங்குவது  : கும்பகோணத்தில் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன

தரிசன நேரம் : காலை 6 மணி முதல்  பகல் 12 மணி வரை   மாலை 4 மணி முதல் இரவு8 மணி  வரை

கேயில் முகவரி : மேலாளர் ஸ்ரீசிவசூரியப்பெருமான் கோயில், சூரியனார் கோயில் அஞ்சல், திருமங்கலக்குடி – 612 102.

தொலைபேசி : 0435 2472329

 





 

5 comments:

Karthikeyan Rajendran said...

அப்பாடா ஜி+ கமேண்ட் பாக்ஸ்ல இருந்து விடுதலை

திண்டுக்கல் தனபாலன் said...

இந்தக் கோயிலுக்கு இருமுறை சென்று வந்துள்ளோம்... கோயிலின் சிறப்புகள் மற்றும் தகவல்களுக்கு நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா... கருத்திரை இடுபவர்களுக்கும் விடுதலை...!

Karthikeyan Rajendran said...

மிக்க நன்றி. தனபான் சார்

sreeswernakala pairavar said...

வெம்பாக்கம் ஸ்ரீசொர்ணகால பைரவர் கோயில் பற்றிய தகவல் அறிய கீழ்க்கண்ட வலைத்தலைத்தை பார்க்கவும்.
Sriswernakalapairavar.blogspot.com