Tuesday, February 28, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு பிரத்யங்கிரா தேவி திருக்கோவில்!...

அருள்மிகு பிரத்யங்கிரா தேவி திருக்கோவில்
🌀 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே உள்ள அய்யாவாடியில் பிரத்தியங்கிராதேவிக்கு தனிக் கோவில் உள்ளது. பிரத்தியங்கிரா தேவி சக்தியின் வடிவமாகக் கருதப்படும் இந்து சமயப் பெண் தெய்வம் ஆவார். பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும்.
சுவாமி : அருள்மிகு அகத்தீஸ்வரர்
அம்பாள் : அருள்மிகு தர்மசம்வர்த்தினி (பிரத்யங்கிரா தேவி)
தீர்த்தம் : புத்திர தீர்த்தம்
தலவிருட்சம் : ஆல மரம்
அமைப்பு :
🌀 இங்கு கோவில் கொண்டுள்ள தேவி சிம்ம முகத்தோடும் 18 திருக்கரங்களோடும் 4 சிம்மம் பூட்டிய ரதத்தில் லட்சுமி சரஸ்வதியோடு காட்சி தருகிறாள்.
🌀 கும்பகோணம் திருநாகேஸ்வரத்துக்கு அருகில் உள்ள அய்யவாடியில் குடிகொண்டிருக்கும் தேவியின் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றைக்கும் சுடுகாடுகள் இருக்கின்றன.
தல வரலாறு :
🌀 மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். ராமன் அவனுடன் போரிட இலங்கை சென்றார். தன் சகோதரர்களையும், மகன்களையும் வரிசையாக ராமனுடன் போரிட அனுப்பிய ராவணன், எல்லாரையும் இழந்தான். மிகுந்த பலசாலியான இந்திரஜித் ஒருவன் மட்டும் எஞ்சியிருந்தான். காளி பக்தனான இந்திரஜித், ராமனை போரில் தோற்கடிப்பதற்காக அவளை வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோற்றுவித்து அதர்வணகாளியான பிரத்யங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகம் நடத்துவார்கள்.
🌀 அந்த யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான். நிகும்பலா யாகம் மட்டும் முடிந்து விட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான். அதன் பின் அவனை போரில் வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் ராமனுக்கு தெரிந்து விட்டது. ராமபிரானும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்துவதையும், பரமாத்மாவான ராமன் நியாயத்திற்காக யாகம் நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா. ராமரின் யாகத்திற்கும், அவரது நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்த்த தேவி அவருக்கு அனுக்கிரஹம் புரிந்தாள்.
🌀 தன் நீண்ட நாள் பக்தனாயினும், அநியாயத்துக்கு துணைபோன இந்திரஜித்தின் பூஜையை ஏற்க மறுத்துவிட்டாள். எனவே இந்திரஜித் போரில் தோற்றான். இருந்தாலும், தன் பக்தன் என்ற முறையில், அவனது வீரம் ராமாயணத்தில் புகழப்படும் வகையில் ஆசி தந்தாள்.
பிரார்த்தனை :
🌀 மந்திர, தந்திரங்கள் என கூறிக்கொண்டு பிரத்யங்கிராதேவியை முதன்மைப்படுத்தி நாச காரியங்களில் ஈடுபடுகிறவர்களை பிரத்யங்கிராதேவி நிச்சயமாக அழித்துவிடுவாள்.
🌀 இவளை நம்பி வணங்கும் பக்தர்களை எல்லாவிதமான நவக்கிரக தோஷங்களிலிருந்தும் காப்பாற்றி எல்லா ஐஸ்வர்யங்களையும் கொடுக்கிறாள்.

தினம் ஒரு திருத்தலம் - சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், காங்கேயம்!...

 சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும்.
மூலவர் : சுப்ரமணிய சுவாமி
உற்சவர் : வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர்
அம்மன் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : தொரட்டி மரம்
தீர்த்தம் : காசி தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
தலச் சிறப்பு :
🌿 மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே. மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே.
🌿 நவக்கிரகங்கள் அனைத்தும் சு+ரியபகவானைப் பார்த்து நிற்கின்றன.
🌿 அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும்.
🌿 திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும் இங்கு கிடைக்கும்.
உத்தரவு பெட்டி :
🌿 சிவன்மலை கோவில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, தனக்கு இன்ன பொருளை வைத்து பு+ஜை செய்யுமாறு கூறுவார். அதன்படி, சுவாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டு, உத்தரவானதும் குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
தல வரலாறு :
🌿 மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பட்டாலி என்ற கிராமமே சிவன்மலை அமைந்துள்ள பகுதியாகும். பால்வளம் மிக்க வனத்தில் கோவில் கொண்டுள்ள நல்ல மங்கை உடனமர் சிரவனீஸ்வரர் மகனே, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி. மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார்.
பிரார்த்தனை :
🌿 திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது.
🌿 நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம்.
🌿 சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார்.
🌿 மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.
ஓம் நமசிவாய
சரவணபவ

நன்னெறிக்கதைகள்

யாருக்கெல்லாம் நடுங்கும் படியான துன்பங்கள் வருமென இதைப் படித்து தெரிந்துக் கொள்ளுவோம்....!
திருக்குறள் கதை
குறள் :
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
குறள் விளக்கம் :
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
குறளுக்கான கதை :
சுவாமிநாதன் அந்த கிராமத்தில் பண்டிதர். அவர் சிறந்த அறிவு கொண்டிருந்ததோடு, அன்பும் அடக்கமும் மிகுந்தவராக விளங்கினார். ஏழைக் குழந்தைகளுக்காக இலவச பாடசாலை ஒன்றை அமைத்து கல்வி போதித்து வந்தார். மக்கள் பண்டிதரின் மீது நல்ல மரியாதை வைத்திருந்தனர்.
கண்ணப்பன் என்ற செல்வந்தனும், அதே கிராமத்தில் வசித்து வந்தான். முரடனாகிய கண்ணப்பன் மீது கிராம மக்களுக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை. செல்வந்தனாக இருந்தும் தனக்கு கிடைக்காத மதிப்பும், மரியாதையும் பண்டிதருக்கு கிடைக்கிறதே? என்று கண்ணப்பன் பண்டிதரின் மீது பொறாமை கொண்டான்.
பண்டிதரை எங்கு கண்டாலும், கண்ணப்பன் வம்புக்கு இழுப்பான். அவமானப்படுத்த நினைப்பான்.
ஒருநாள் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த பின் பண்டிதர் சுவாமிநாதன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கண்ணப்பன் தன் தோட்டத்திலிருந்து பறித்த பு+சணிக்காயோடு வந்து கொண்டிருந்தான். கண்ணப்பனுடன் அவனது இரு தோழர்களும் வந்தனர்.
கண்ணப்பனையும், அவனது தோழர்களையும் கண்ட பண்டிதர் ஒதுங்கி நடந்தார்.
ஆனால் அவர்களோ, என்ன, பண்டிதரே பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறீர்களா? என்று வழியை மறித்தபடி கேட்டு வம்பிழுத்தனர்.
ஆமாம் கண்ணப்பா. நான் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் வழியை விடு என்றபடி பண்டிதர் விலகி நடக்கத் தொடங்கினார். நீங்கள் பெரிய அறிவாளி என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். அப்படியானால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் விட்டுவிடுகிறோம். இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டால் உங்கள் வழிக்கே நான் வரமாட்டேன் என்று வீம்பாகப் பேசினான்.
சரி, உன் கேள்வி என்னவென்று கேளு கண்ணப்பா! எனக்கு நேரமாகிறது என்றார் பண்டிதர்.
என் கையிலுள்ள இந்த பு+சணிக்காயின் எடை எவ்வளவு? நீங்கள் சொல்லும் எடை சரியாக இருக்கிறதா? என்று நாங்கள் நிறுத்திப் பார்ப்போம். சரியாக சொல்லாவிட்டால் நீங்கள் முட்டாள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்று திமிராகப் பேசினான் கண்ணப்பன்.
பண்டிதர் ஒரு கணம் யோசித்தார். கண்ணப்பா இந்த பு+சணிக்காய் உன் தலையின் எடைதான் இருக்கிறது. வேண்டுமானால் நிறுத்துப் பார்த்துக்கொள் என்று பதில் சொன்னார் பண்டிதர்.
இதை கேட்ட கண்ணப்பனும், அவனது கூட்டாளிகளும் அதிர்ந்து போனார்கள்.
அட பண்டிதர் நம்மை மடக்கிவிட்டாரே? பு+சணிக்காயின் எடையை சரி பார்க்க நம் தலையை கொய்தால் அல்லவா முடியும். தலையை கொய்ய முடியுமா? பு+சணியை எடைபோட முடியுமா? என்று திகைத்த கண்ணப்பன், தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஓடியே போனான். அதன்பின் அவன் பண்டிதரிடம் வம்பு செய்வதே இல்லை!

இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

Sunday, February 26, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவில், கரூர்!...,

அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவில்
✼ அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் கரூர் மாவட்டம், அய்யர் மலை என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. இக்கோவிலில் சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்த பச்சை பால், மாலை வரை கெடாது. பத்தி, கற்பு+ரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது. இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 64வது தேவாரத்தலமாகும்.
மூலவர் : ரத்னகிரீஸ்வரர்
அம்மன் : கரும்பார் குழலி
தல விருட்சம் : வேம்பு
தீர்த்தம் : காவேரி தீர்த்தம்
தல வரலாறு :
✼ இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரமாகும். சோதிலிங்க வடிவமானது. மணி முடி இழந்த ஆரிய மன்னன் ஒருவன் இத்தலத்திலுள்ள இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கின்ற போது அங்குள்ள கொப்பரையில் காவேரி தீர்த்தம் ஊற்றப்பட்டது. ஆனால் தீர்த்தம் ஊற்ற ஊற்ற கொப்பரை நிரம்பவே இல்லை.
✼ ஊர் மக்கள் அனைவரும் ஊற்றியும் நிரம்பாததால் மன்னன் கோபம் கொண்டு தன் வாளை உருவி சுவாமி மீது வீசினான். இதனால் சுயம்புவில் இருந்து ரத்தம் வந்தது, மன்னன் தன் தவறை உணர்ந்து இறைவனை வணங்கினான். இதையடுத்து இறைவன் தோன்றி மன்னனுக்கு அருளாசி வழங்கி இரத்தினங்களை வழங்கினார். அந்த தழும்பு இன்னும் சுவாமியின் மீது உள்ளது.
தல பெருமை :
✼ இறைவன் 9 ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையை சுற்றி அமைந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் பூமிக்கடியில் பச்சை கற்கள், சிவப்பு கற்கள் ஆகியவை நிறைய கிடைக்கின்றன. சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இம்மலையில் உள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை.
திருவிழா :
✼ பிரதோஷ காலங்கள், குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் பௌர்ணமி கிரிவல நாட்கள் வாரத்தின் சனி, ஞாயிற்றுக்கிழமைகள், மாதப்பிறப்பு நாட்கள், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
சர்வம் ஓம் நமசிவாயம்

தினம் ஒரு திருத்தலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்!..

🌀 திருக்கச்சியேகம்பம் - எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும்.
அதிசயங்கள் :
🌿 மூலவர் : ஏகாம்பரநாதர்
🌿 அம்மன் : காமாட்சி
🌿 தல விருட்சம் : மாமரம்
🌿 பழமை : 1000 - 2000 ஆண்டுகள்
தல வரலாறு :
🌠 கைலாயத்தில் சிவன் யாகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்றார்.
🌠 பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.
🌠 இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார்.
🌠 கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற பெயரும் இருக்கிறது.
தலச் சிறப்பு :
🌠 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது.
🌠 தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.
🌠 ஒற்றை மாமரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத்தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.
பிரார்த்தனை :
👉 திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.
👉 இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

Thursday, February 23, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்!...

 ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. எமபயம் நீக்கும் தலங்களுள் திருக்கடயூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது ஆயுள் விருத்தி தலமாகப் போற்றப்படுகிறது.
சுவாமி : அமிர்தகடேஸ்வரர்
அம்பாள் : அபிராமி
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், சிவகங்கை
தலவிருட்சம் : வில்வம்
தல வரலாறு :
🌿 முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர்ந்தளிக்க முயலும்போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடாததால் சினம் கொண்ட விநாயக பெருமான் இத்திருக்கோவிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை ஒளித்துவைத்தார். அக்குடமே பிற்காலத்தில் சிவலிங்கமாக உருவானதால் (மாறியதால்) 'அமிர்தகடேஸ்வரர்" என்று பெயர் பெற்றார் இங்குள்ள மூலவர். இதனால் விநாயகர் இத்திருக்கோவிலில் 'கள்ளவிநாயகர்" என்று பெயர் பெற்றார்.
🌿 மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்தியை கண்டு இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தம்பதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர்.
🌿 சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர், ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருக்கடவூர் வந்து சேர்ந்தார். அவர் திருக்கடவூர் தலம் வந்தபோது அவருடைய ஆயுள் முடியும் இறுதி நாளும் வந்தது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீசினான். எமனைக் கண்டு அச்சமுற்ற மார்க்கண்டேயர் தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டான். எமனும் பாசக்கயிற்றை லிங்கத்திற்கும் சேர்த்து வீசினான். இறைவன் சிவபெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனைக் சூலாயுத்தால் கொன்று காலனுக்குக் காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்பு பூதேவி, பிரம்மா, மஹாவிஷ்னு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி எமனை உயிர்ப்பித்து அருள் புரிந்தார்.
பிரார்த்தனை :
🌿 இத்தலத்து அமிர்தகடேஸ்வரர் வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும், உடல் பலம் பெறும், நோய் நொடி விலகும், எமபயம் அண்டாது.
🌿 வேலை கிடைக்க, தொழில் விருத்தி அடைய, உத்தியோக உயர்வு பெற இங்கு பிரார்த்தனை செய்தால் நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
🌿 இங்குள்ள அபிராமி அம்மனை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள்.
சிறப்பு :
🌿 ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி பூஜைகள் இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும்.
🌿 கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேஷ நாட்கள்.
🌿 தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இத்தல விசேஷம்.
🌿 கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

Monday, February 20, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்!...

 அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில் பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவதலம் தற்போது அவிநாசி என்று அழைக்கப்படுகிறது.
கோவில் வரலாறு :
✧ சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது எதிரும் புதிருமாக இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அமங்கல ஒலியும் எழ அதன் காரணத்தைக் கேட்டார். ஐந்து வயதுள்ள இரு அந்தணச் சிறுவர்கள் மடுவில் குளிக்கச் சென்றதாகவும், அவர்களில் ஒருவனை மடுவில் இருந்த முதலை விழுங்கி விட்டதாகவும் கூறினர். மேலும் தப்பிப் பிழைத்த சிறுவன் வீட்டில் அவனுக்கு உபநயனம் நடக்கும் விழா ஒலி என்றும், இறந்த சிறுவனின் வீட்டில் சோகத்தால் அழும் ஒலி என்றும் கூறினர். இறந்த சிறுவனின் பெற்றோர் சுந்தரர் வந்திருப்பதை அறிந்து அவரின் உதவியை நாடினர். மடு இருக்குமிடம் கேட்டு அங்கு சென்று முதலையை அழைக்கும் எண்ணத்துடன் சுந்தரர் 'எற்றான் மறக்கேன்" என்று தொடங்கும் பதிகத்தை இறைவனுக்கு கட்டளை இடும் வகையில் பாடும் போது சிவபெருமான் அருளினால் நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட, முதலை அங்கு வந்து சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை, பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது. இத்தகைய அற்புதம் நிகழ்ந்த சிவதலம் தான் அவிநாசியப்பர் திருக்கோவில் ஆகும்.
கோவில் அமைப்பு :
✧ இக்கோவில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு திசையில் 7 நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது.
✧ கோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் உள்ளன. ராஜ கோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கணபதியின் சிற்பங்கள் உள்ளன. உள்ளே மண்டபத்தின் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
✧ மண்டபத்தில் இருந்து உள் பிரகாரத்தில் நுழைந்தால் மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருக்கிறது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
✧ மூலவர் கர்ப்ப கிரகத்தைச் சுற்றி உள்ள பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் அமைந்துள்ளன.
✧ மேலும் உள் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சிற்பங்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீகாலபைரவர் சந்நிதியும் இத்தலத்தில் சிறப்பிற்குரியது.
✧ நடராஜர் மண்டபத்திலுள்ள ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனி எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது. இத்தலத்தில் பிரம்மா 100 ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் என்னும் யானை 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாகக்கன்னி 21 மாதங்களும் வழிபாடு செய்ததாக ஐதீகங்கள் உண்டு.
✧ இறைவி கருணாம்பிகை சந்நிதி, மூலவர் அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இங்கே அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு கருணாம்பிகை காட்சி தருகிறாள்.
✧ அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பலாம்.
தேர்த்திருவிழா :
✧ சித்திரை மாதத்தில் நிகழும் பிரமோற்சவம், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் கொடியோற்றம் மற்றும் பூரம் நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா ஆகியவை சிறப்பாக இருக்கும். தேர்த்திருவிழாவின் 5 ஆம் நாள் மிகவும் முக்கியமானதாகும். அன்றைய தினம் 63 நாயன்மார்களுக்கு இறைவன் ரிஷபாரூடராக தரிசனம் தருவது சிறப்பாகும்.

Saturday, February 18, 2017

தினம் ஒரு திருத்தலம் - வயலூர் முருகன் கோவில்!....

✼ வயலூர் முருகன் கோவில் திருச்சியில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. இக்கோவில் ஆதி வயலூர், குமார வயலூர், வன்னி வயலூர் மற்றும் அக்னீஸ்வரம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
சுவாமி : சுப்ரமணிய சுவாமி
அம்பாள் : வள்ளி, தெய்வானை
தீர்த்தம் : சக்தி தீர்த்தம்
தலவிருட்சம் : வன்னி மரம்
தலச்சிறப்பு :
✼ அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன் வேலினால் ஓம் என்று எழுதி திருப்புகழ் பாட அருளிய தலம்.
✼ அக்னிதேவன், அருணகிரிநாதர், திருமுக கிருபானந்த வாரியார் ஆகியோர் போற்றி வணங்கிய தலம்.
✼ இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும், குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும்.
✼ சோழர் காலத்திய கல்வெட்டுகள் திருகோவிலின் பழமைக்கு சான்றாகும். முருகன் தன் வேலால் உருவாக்கப்பட்ட சக்தி தீர்த்தம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.
✼ இத்தலத்தின் ஆதிநாதர் சன்னதி கர்ப்பகிரக சுவரில் 20 கல்வெட்டுக்கள் உள்ளன. சித்தர்கள் தேடிவந்து முக்தி அடையும் இடம் வயலூர் முருகன் சன்னதி ஆகும்.
தல வரலாறு :
✼ சோழமன்னர்கள் இப்பகுதிக்கு வந்து வேட்டையாடும்போது தாகம் எடுக்க மூன்று கிளைகளாக அமைந்து வளர்ந்திருந்த ஒரு கரும்பினை ஒடித்து தாகம் தீர்க்க எண்ணி ஒடித்த போது கரும்பிலிருந்து இரத்தம் கசிந்தது. பிறகு அவ்விடத்தை தோண்டியபோது கரும்பு வளர்ந்த அடிப்பகுதியில் சிவலிங்கம் தென்பட, உடனே மன்னர் இத்திருக்கோயிலினை அமைத்து சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வந்தார். பிறகு அந்த இடத்தில் கோயில் எழுப்பினான். சிவனுக்கு ஆதிநாதர் என்ற பெயர் சூட்டி, அம்பாள் ஆதிநாயகிக்கும் சன்னதி எழுப்பினான். வயல்கள் நிறைந்த அவ்வூருக்கு 'வயலூர்" என்று பெயர் ஏற்பட்டது.
திருப்புகழ் தந்த திருமுருகன் :
✼ திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரியார், 'முத்தைத் தரு" எனத் துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின், அவர் வேறு பாடல் எதுவும் பாடவில்லை. ஒரு சமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி, 'வயலூருக்கு வா!" என்றது. அருணகிரியார் இங்கு வந்தார். அங்கு முருகனின் தரிசனம் கிடைக்குமென நினைத்து வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முருகன் வரவில்லை. உடனே 'அசரீரி பொய்யோ?" என உரக்கக் கத்தினார். அப்போது, முருகன் அங்கு தோன்றி வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் 'ஓம்" என்று எழுதினார். அதன்பின், இத்தல முருகனைப் போற்றி அவர் 18 பாடல்கள் பாடினார். தொடர்ந்து பல முருகன் கோயில்களுக்குச் சென்று திருப்புகழ் பாடினார்.
பிரார்த்தனை :
✼ நோய் நீங்க, துன்பங்கள் நீங்க, ஆயுள் பலம், கல்வியறிவு, விவசாயம் செழிக்க இத்தலத்து முருகனிடம் வேண்டுகின்றார்கள்.
✼ செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட நல்ல வரன் அமையும்.
✼ இத்திருத்தலம் கால சர்ப்ப தோஷம் நீக்கும் வல்லமை உடையது.
திருவிழா :
✼ வைகாசி விசாகப்பெருவிழா, கந்த சஷ்டி பெருவிழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்றவை இங்கு விஷேஷமாக கொண்டாடப்படுகிறது.



ஓம் சரவணபவ

Friday, February 17, 2017

தினம் ஒரு திருத்தலம் - கபாலீஸ்வரர் திருக்கோவில், மயிலாப்பூர்!...

🌠 கபாலீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீஸ்வரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
சுவாமி : கபாலீஸ்வரர்
அம்பாள் : கற்பகாம்பாள்
தீர்த்தம் : கபாலீ தீர்த்தம்
தலவிருட்சம் : புன்னை மரம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
தலச்சிறப்பு :
🌠 வாயிலார் நாயனார் அவதரித்த தலமாகும்.
🌠 சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கியது மற்றும் அம்பாள் மயில் வடிவம் கொண்டு வழிபட்டது ஆகியன இத்தலத்தில் நிகழ்ந்தன என்பது ஐதீகம்.
🌠 முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம்.
🌠 பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம்.
🌠 தேவாரம் பாடல் பெற்ற கோவில்களில் இக்கோவிலும் ஒன்று.
🌠 சிவன் இத்திருக்கோவிலில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
🌠 இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
🌠 மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது.
🌠 திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோவில், நாற்புறமும் மாடவீதிகளையும், திருக்குளம், அழகிய கோபுரங்கள் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.
தல வரலாறு :
🌠 பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அவ்வேளையில் மயில் ஒன்று நடன மாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோச்சனம் கேட்டாள். பு+லோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோச்சனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோச்சனம் பெற்றாள், பார்வதிதேவி. இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலாப்பூர் என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது.
பிரார்த்தனை :
🌠 இத்தலத்து ஈசனை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும்.
🌠 இத்தலத்து அம்மனை வழிப்பட்டால் உடல் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமடைகிறது.
🌠 கல்யாண வரம், குழந்தை வரம் வேன்டி இத்தலத்து இறைவனை பிரார்த்திக்கின்றனர்.
திருவிழா :
🌠 பங்குனிப் பெருவிழா - பங்குனி 10 நாட்கள் அறுபத்துமூவர் திருவிழா.
🌠 பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.
🌠 தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் மற்றும் பிற விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.


ஓம் நமசிவாய

Thursday, February 16, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு முத்துகுமாரசுவாமி கோவில், பவளமலை!...

அருள்மிகு முத்துகுமாரசுவாமி கோவில், பவளமலை
★ ஈரோடு மாவட்டம் கோபிசெட்டியபாளையத்தில் பவளமலை எனும் அழகிய குன்றில் அருள்பாலிக்கும் முருகர் ஆலயமாகும். பழமையான இக்கோயிலில் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். துர்வாச மகரிஷி இத்தல முத்துக்குமாரசுவாமியை வணங்கி வழிபட்டுள்ளார்.
மூலவர் : முத்துகுமாரசுவாமி
அம்மன் : வள்ளி தெய்வானை
பழமை : 1000 - 2000 வருடங்களுக்கு முன்
ஊர் : பவளமலை, ஈரோடு
தலச் சிறப்பு :
★ பச்சைமலை, பவளமலை எங்கள் நாடு, பரமேஸ்வரன் வாழும் மலை எங்கள் நாடு என்ற குற்றாலக்குறவஞ்சியில் ஒரு வரி இருக்கிறது. அதில் குறிப்பிடப்படுவதும், முல்லைக்கு தேர்கொடுத்த பாரி ஆண்டபகுதி என்ற பெருமை கொண்டதும் இந்த பவளமலையே.
திரிசதார்ச்சனை : திரி என்றால் மூன்று, சதம் என்றால் நு}று. திரிசதை என்றால் 300. முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பின், இந்திரன் முதலான தேவர்கள் கூடி, அவருக்கு செய்த அர்ச்சனையே திரிசதார்ச்சனை. வெற்றியைப் புகழ்ந்து செய்ததால் இதற்கு சத்ரு சம்ஹார திரிசதார்ச்சனை என்று பெயர் வந்தது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழிலும் சிவனைப் போன்று முருகனுக்கும் இருக்கிறது என்று போற்றப்படும் அர்ச்சனையாக விளங்குகிறது.
செவ்வாய் தோஷ பரிகாரம் : பவளத்தின் நிறம் சிவப்பு, சிவப்பின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் அதிதேவதை சுப்ரமணியர். பவளமலையில் திரிசதார்ச்சனை செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் நீங்குகிறது.
தவத்தில் வள்ளி தெய்வானை : மூலவர் முத்துக்குமாரசுவாமி பிரம்மசாரியாக எழுந்தருளியுள்ளார். வாயுமூலையில் வள்ளி தெய்வானை முருகனைத் திருமணம் செய்து கொள்வதற்காக தவம் இருக்கின்றனர். அதாவது, திருமணத்துக்கு முந்தைய வள்ளி, தெய்வானையை இங்கு தரிசிக்கலாம். கைலாசநாதர், பெரியநாயகி அம்பாள் சந்நிதியும் உள்ளது.
கைலாசலிங்கம் : கைலாசநாதர் லிங்கம் அருகிலுள்ள வயல்வெளியில் புதைந்து இருந்தது. விவசாயிகள் வயலை உழும் போது லிங்கம் கிடைத்தது. விவசாயிகள் இதனை எடுத்து வந்து கோயிலில் பூஜித்து வருவதால் அதை சுயம்புலிங்கமாக (தானாகவே தோன்றும் லிங்கம்) கருதுகின்றனர். கைலாசநாதரை வணங்கினால் நோய் குணமடைகிறது.
தல வரலாறு :
★ வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் நடந்த பலப்பரிட்சையில், சக்தி வாய்ந்த மேரு மலையை தாக்கும் நோக்கத்துடன் மலை மீது மோதினார் வாயு. காற்றின் வேகம் தாங்காமல் மலைச் சிகரங்களில் ஒன்று பூலோகத்தில் விழுந்தது. அதுவே பவளமலை. ஞானப் பழம் கிடைக்காததால் முருகன் கோபித்துக் கொண்டு பழனியில் வந்து தங்கினார். அதன்பிறகு, உலகத்தார் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் என வழிப்படத் தொடங்கினர். அவ்வகையில் பவளமலையில் குமரன் இருப்பதாக எண்ணிய கணவால குலகேஷத்திரத்தைச் சேர்ந்த பக்தர்கள் முருகப் பெருமானுக்கு இங்கு கோயில் எழுப்பி வழிபட்டனர் என்பது வரலாறு.
பரிகாரம் :
★ செவ்வாய் தோஷமுள்ளவர்கள் மூலவர் முத்துக்குமாரசுவாமிக்கு 'திரிசதார்ச்சனை" செய்வதால் தோஷம் நீங்கி திருமணம் கைகூடுகிறது.
★ திருமணத்தடை நீங்க, குழந்தைப் பேறு கிடைக்க, தொழில் வளர்ச்சி அடைய இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
★ பிரார்த்தனை நிறைவேறிய உடன் பால் குடம் எடுத்தும், பாலாபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.
திருவிழா :
★ திருகார்த்திகை, கந்த சஷ்டி, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், தைப்பூசம் போன்றவை இங்கு விஷேஷமாக கொண்டாடப்படுகிறது.

Wednesday, February 15, 2017

தினம் ஒரு திருத்தலம் - உப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம்!....

🌀 உப்பிலியப்பன் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும்.
மூலவர் - உப்பிலியப்பன்
உற்சவர் - பொன்னப்பன்
அம்மன் - பூமா தேவி
பழமை - 1000 - 2000 வருடங்கள்
ஊர் - திருநாகேஸ்வரம்
மாவட்டம் - தஞ்சாவூர்
தல வரலாறு :
🌠 மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள், என்று கேட்டாள்.
🌠 மகாவிஷ்ணு அவளிடம், நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய், என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார்.
🌠 லட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர் சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை.
🌠 மேலும், சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார்.
🌠 தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமையுடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசிமாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள்.
தல சிறப்பு :
🌿 மார்க்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர். இத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய க்ஷேத்திரம், ஒப்பிலியப்பன் கோவில், தென் திருப்பதி என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.
🌿 உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.
பிரார்த்தனை :
👉 ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படுகிறது. திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் கருதப்படுகிறார்.
👉 இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் தம்பதிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். சகிப்புத்தன்மை அதிகரிக்கும்

Tuesday, February 14, 2017

தினம் ஒரு திருத்தலம் - சோமநாதர் கோவில், மயிலாடுதுறை!...


 சோமநாதர் கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் நீடூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் சுந்தரர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும்.
✧ மூலவர் : சோமநாதேஸ்வரர்
✧ அம்பாள் : வேயுறு தோளியம்மை, மகாலட்சுமி, ஆதித்ய அபயப்ரதாம்பிகை
✧ தீர்த்தம் : புஷ்கரணி, செங்கழு நீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம், ,சூரிய தீர்த்தம்
✧ தலவிருட்சம் : மகிழ மரம்
✧ பழமை : 1000 - 2000 வருடங்களுக்கு முன்
தல வரலாறு :
✧ ஒரு சமயம் இந்திரன் பூலோகத்திற்கு வந்தபோது, காலை நேரத்தில் சிவபு+ஜை செய்ய விரும்பினான். தேவேந்திரனுக்கு இத்திருத்தலத்தில் சிவலிங்கம் ஏதும் தென்படவில்லை. எனவே காவிரி ஆற்றின் மணலில் ஒரு சிவலிங்கம் செய்து, ஒரு பாடலைப் பாடி, சிவபெருமானின் நடன தரிசனம் வேண்டி பிரார்த்தித்தான். அதனால் மகிழ்ந்த சிவன் இந்திர பகவானுக்கு நடன காட்சி தந்தமையால், கான நர்த்தன சங்கரா எனக் கைகூப்பி இந்திரன் ஈசனை வணங்கினார். அன்று முதல் இந்த சோமநாதப்பெருமானுக்கு கான நர்த்தன சங்கரன் என்ற பெயர் உண்டாயிற்று. மணலிலால் ஆன இந்த லிங்கத்தில் தேவேந்திரனின் கைவிரல்கள் பதிந்து இருப்பதை இன்றும் காணலாம்.
✧ தன்மசுதன் எனும் கொடிய அரக்கன் தன்வினைப் பயனால் நண்டாகப் பிறந்து, நாரதமுனியிடம் சாப விமோச்சனம் வேண்டினார், அவரும் சோமநாதரைச் சரணடைய பணித்தார். நாரதமுனியின் அறிவுரைப்படி சிவதரிசனம் பெற்ற தன்மசுதன், சிவனிடம் ஐக்கியமானான். நண்டு சென்று சிவபெருமானிடம் ஐக்கியமான துளை இன்றும் சிவ லிங்கத்தில் காணப்படுகின்றது.
✧ பத்ரகாளியம்பிகை இச்சிவனை தொழுதே கைலாயம் சென்றாள் என்பது நம்பிக்கை.
தல சிறப்பு :
✧ சோமநாத சுவாமி சுயம்பு மூர்த்தியாக, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் தொழுத மூர்த்தியாக, இப்பு+வுலகில் கைலாசமாக விளங்கும் புண்ணியத் தலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சோமநாத சுவாமி சகல சாபங்களையும், தோஷங்களையும் நீக்க வல்லவர்.
✧ இத்திருத்தலம் காவிரி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. சோமநாதசுவாமி கொலுவிருக்கும் விமானம் இருதளம் எனப்படும் கீர்த்தி மிகு விமானம் ஆகும்.
✧ சூரியநாராயணனே இங்கு தங்கி, அப்பனாம் சோமநாதப் பெருமானையும், அம்மையாம் வேயுறு தோளியம் பாளையும் தொழுதேத்திய புகழ் மிக்க தலமிது.
✧ இத்தலத்தில் நவகிரகங்கள் கிடையாது. ஆனால், நவகிரகங்கள் ஒன்றிணைந்து, ஒரே தீர்த்தமாக, 'ஒன்பது தீர்த்தம்" என்றே போற்றப்படும் புஷ்கரணி இங்குள்ளது.
✧ பல கோவில் சென்று பூஜைகள் புரிந்து பயனின்றி போனாலும் இத்தலத்தில் ஒன்பது தீர்த்தமெனும் புஷ்கரணியில் நீராடினால் நவகிரக தோஷங்கள் உள்ளிட்ட சகல தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
பிரார்த்தனை :
✧ இந்த திவ்யமூர்த்தியை ஆவணிமாதம் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் விரதமிருந்து வழிபட்டால், உடம்பில் உள்ள மச்சம், மாறாத வடு, தோலில் ஏற்பட்ட வெள்ளைப் புள்ளிகள், கருப்பு புள்ளிகள், தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
✧ திருமணத்தடை, புத்திர தோஷம், செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
✧ பிரார்த்தனை செய்தவுடன் சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

Monday, February 13, 2017

தினம் ஒரு திருத்தலம் - ஐராவதேஸ்வரர் கோவில், கிருஷ்ணகிரி!...


🌠 ஐராவதேஸ்வரர் திருக்கோவில் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் கிராமத்தில் 1800 வருடம் பழமையான திருகோவில் ஆகும். இரட்டை சன்னிதியில் இரண்டு மூலவராக சிவ பெருமான் சுயம்பு லிங்க பெருமான் யானை முகத்தோடு எங்கும் காண முடியாத அதிசய வடிவில் இங்கு அருள்பாலித்து வருகிறார்.
மூலவர் : ஐராவதேஸ்வரர், அழகேஸ்வரர்.
அம்மன் : காமாட்சி, அகிலாண்டேஸ்வரி.
தீர்த்தம் : எமதீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
பழமை : 500 வருடங்களுக்கு முன்.
ஊர் : அத்திமுகம்.
மாவட்டம் : கிருஷ்ணகிரி.
தல வரலாறு :
🌠 விருத்தாசூரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் துன்பத்தை விளைவித்து வந்தான். இதனால் வருத்தமுற்ற தேவர்கள், தேவர்களின் தலைவனான இந்திரனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட இந்திரன் தனது ஆஸ்தான வாகனமான ஐராவதத்துடன் சென்று விருத்தாசூரனுடன் போரிட்டு அவனை அழித்தான்.
🌠 இந்திரன் விருத்தாசுரனை கொன்று அழிக்க அவருக்கும் அவரது யானை ஐராவத்திற்கும் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது.
🌠 பிரம்மஹத்தி தோஷம் நீங்க அகஸ்திய நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டுமென அசரீரி கூறியது. இதையடுத்து இந்திரனும் ஐராவதமும் அகஸ்திய நதி ஓடும் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றனர். ஐராவதத்தின் பக்தியை மெச்சி, சுவாமி சுயம்புவில் யானை முகத்தை பொரித்ததோடு லிங்கத்திற்கு ஐராவதேஸ்வர் என்று பெயரும் இட்டார்.
🌠 ஹஸ்தி என்றால் யானை. யானை இங்கு வந்து வழிபட்டதால் இத்தலத்திற்கு 'ஹஸ்திமுகம்" என பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் மருவி 'அத்திமுகம்" என அழைக்கப்படுகிறது.
தல சிறப்பு :
🌠 ஒரே கோவிலில் இரண்டு மூலவர்கள் உள்ளனர்.
🌠 சூரிய பூஜைக்காக நந்தி விலகியிருக்கும் தலம் இது. மிக பெரிய பஞ்ச லிங்க சன்னிதி.
🌠 சுயம்பு லிங்கம் யானை முகத்தோடு விளங்குகிறார், அதே கருவறையில் அம்மையும் வீற்றிருக்கின்றார்.
🌠 கோட்டை கோவில், நவ கிரஹங்கள் யோக நிலையில் அமைதியாய் வீற்றிருப்பது அதிசயம்.
🌠 ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது.
🌠 காமாட்சி சமேத ஐராவதேஸ்வரர் ஒரு மூலஸ்தானத்திலும், அகிலாண்டேஸ்வரி சமேத அழகேஸ்வரர் தனி மூலஸ்தானத்திலும் அருள்பாலிக்கிறார்கள்.
🌠 தென்மேற்கு மூலையில் மிகப்பெரிய பழமையான பாம்பு புற்று ஒன்று உள்ளது. ஆரம்பகாலத்தில் மணலால் ஆன இந்த புற்று காலப்போக்கில் இறுகி பாறையாக மாறியதிலிருந்தே இந்த புற்றின் பழமையை தெரிந்து கொள்ளலாம்.
பிரார்த்தனை :
🌠 சுகமான வாழ்க்கை வேண்டுவோர் இந்திரன் வழிபட்ட தலங்களில் வழிபாடு செய்வர், அந்த வகையில் இந்திரன் வழிபட்ட லிங்கம், அதுவும் தோஷங்களில் தலையாய பிரம்மஹத்தி தோஷம் நீக்க பெற்ற ஸ்தலம்.
🌠 சுவாமி காமாட்சி அம்மையுடன் தம்பதி சமேதராக சிவ சக்தியாக ஒரே கருவறையில் அருள் பாலித்து வருவதால் களத்திர தோஷம், திருமண தடை, கணவன்-மனைவி இடையே ஒற்றுமை குறைவு போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது.
சர்வம் சிவமயம்.

Sunday, February 12, 2017

தினம் ஒரு திருத்தலம் - விஸ்வநாதர் திருக்கோவில், தென்காசி!...


🍄 தென்காசி, காசி விஸ்வநாதர் திருக்கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசி எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் உலகம்மன் கோவில் என்றும், தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் : விஸ்வநாதர்.
சுவாமி : அருள்மிகு காசிவிஸ்வநாதர்.
அம்பாள் : அருள்மிகு உலகம்மன்.
தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
தலவிருட்சம் : செண்பக மரம்.
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்.
ஊர் : தென்காசி.
மாவட்டம் : திருநெல்வேலி.
தல வரலாறு :
🍄 சுமார் 700 வருடங்களுக்கு முன்பு தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் சிவ பெருமானை வழிபட காசிக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தான்.
🍄 மன்னனின் குலதெய்வமான முருகப்பெருமான் மன்னனுக்கு சக்தி வாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றைக் கொடுத்து வான் மார்க்கமாக காசி சென்று வழிபடச் செய்தார். இவ்வாறு காசிக்குச் சென்று தினமும் காசி விஸ்வநாதரை வழிபட இயலாததை எண்ணி, மன்னன் மனம் வருந்தினான்.
🍄 ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய இறைவன், வடக்கே உள்ள காசிக்கு வருவதற்கு பதிலாக இவ்விடத்திலேயே தட்சிண(தென்) காசியில் கோவில் அமைத்து வழிபடும்படி கூறினார்.
🍄 நான் இருக்குமிடத்தை நீ காண உனக்கு எறும்புகள் சாரைசாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் என்று கூறி மறைந்தார். மறுநாள் எறும்பு சாரைசாரையாக செல்லுமிடத்தை மன்னன் அடையாளம் கண்டு அங்கு சிவலிங்கமும், நந்தியும் இருப்பதைக் கண்டு வணங்கினான்.
🍄 அது சிற்றாற்றங்கரையில் செண்பக வனத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த இடத்தில் புற்றில் சுயம்புலிங்கம் கண்டு கோவில் கட்டி, கோபுரமும் கட்டி, தென்காசி நகரையும் நிர்மாணித்து தென்காசி கண்ட பாண்டியன் ஆனான்.
தல சிறப்பு :
🍄 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
🍄 கோவில் மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்தே பார்க்கலாம். அந்த அளவிற்கு சுவாமி சன்னதி அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
🍄 இந்த கோவில் கோபுரத்தின் ஒன்பது நிலைகளிலிருந்தும் தென்காசியின் இயற்கை அழகை பார்க்க அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாதையில் நடந்து சென்றால் வான் வெளியில் வலம் வருவது போல் இருக்கும். கோபுரத்தின் 9வது நிலையில் இருந்தபடியே கோபுரத்தை சுற்றி வரும் பால்கனி வசதி உள்ளது.
🍄 மற்ற தலங்களில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் துர்க்கை இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
🍄 இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்ம முனிவர் போன்றோர் வழிபட்ட தலம். நந்தியின் அவதார தலம் எனவும் போற்றப்படுகிறது.
பிரார்த்தனை :
🍄 இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல இறைவனை வழிபட்டால் மன நிம்மதி உண்டாகும்.
ஓம் நமசிவாய

Saturday, February 11, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவில்!...

சாரங்கபாணி சுவாமி கோவில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோவில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது.
✻ மூலவர் - சாரங்கபாணி, ஆராவமுதன்
✻ தாயார் - கோமளவல்லி
✻ தீர்த்தம் - ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு
✻ பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்
சிறப்பு :
✻ இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும். இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோவிலில் கோமளவல்லித் தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். பின்னரே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.
தல வரலாறு :
✻ ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே என கோபப்பட்ட லட்சுமி, கணவரைப் பிரிந்தாள். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், அம்மா! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது.
✻ லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும் என்றார். லட்சுமி தாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசிர்வதித்தாள். தன் சபதப்படி திருமாலைப் பிரிவதாகவும், பூலோகத்தில் பிருகுவின் மகளாகப் பிறக்கப் போவதாகவும், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதன்படி பிருகு, புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு கோமளவல்லி என பெயரிட்டு வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால், சாரங்கபாணி எனப்பட்டார். இவ்வூரை தாயாரின் அவதார ஸ்தலம் என்கிறார்கள்.
பிரார்த்தனை :
✻ கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்து நடக்கும் என்பது ஐதீகம்.
✻ பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
திருவிழா :
✻ இக்கோவிலில் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா சிறப்புடையது. இதற்காக இந்தக் கோவிலின் பெரிய தேர் சித்திரை தேர் என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோவில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேராகும்.
✻ தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மகத் தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும்.
ஓம் நமோநாராயணாய நமஹ

Friday, February 10, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு பார்த்தசாரதி கோவில், திருவல்லிக்கேணி!....

🌀 மகாபாரதத்தில் தேரோட்டியாக வந்து அர்ஜூனனுக்கு அறிவுரை சொன்ன கிருஷ்ணரின் அவதாரமான பார்த்தசாரதியின் கோவில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது.
தல வரலாறு :
🌠 திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்ற மன்னனுக்கு, பெருமாளை குருக்ஷேத்ர போரில் தேரோட்டியாக வந்த கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.
🌠 தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம் வேண்டினார். சுவாமியும் தேரோட்டியாக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் தங்கும்படி வேண்டவே, பாரதப் போரில் அர்ஜூனனுக்கு சாரதியாக இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமாள், ஆயுதம் எதையும் எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார்.
🌠 பாரதப்போரில் அர்ஜூனன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகளையெல்லாம் தானே முன்னின்று ஏற்றுக் கொண்டு அர்ஜூனனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்ததை விளக்கும் வகையில் இன்றும் பார்த்தசாரதி முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் காணப்படுகின்றன.
🌠 இத்தலத்து உற்சவர், பார்த்தசாரதி ஆவார். பிற்காலத்தில் இவர் பிரசித்தி பெறவே, இவரது பெயரில் கோவில் அழைக்கப்பட்டது.
🌠 வியாச முனிவரால் இங்கே இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்கிறது ஸ்தல புராணம். இங்கு காணப்படும் மூலவர் திருமேனியே, கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது. நின்றான் திருக்கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர் இவரே மூலவர். அமர்ந்தான் கோலத்துக்கு தௌ;ளியசிங்கர் என்ற ஸ்ரீநரசிம்மர். கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் எனப்படும் ஸ்ரீரங்கநாதர். இந்த மூன்று நிலைகளுமே வீரம், யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்கின்றன.
தலச் சிறப்பு :
🌠 108 வைணவ திவ்ய தேசங்களுக்குள் 61-ம் திவ்ய தேசமாகப் போற்றப்படும் பார்த்தசாரதி கோவில் மூலவர் ஒன்பது அடி உயரமானவர்.
🌠 வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத அதிசயமாகப் பெருமாள் இங்கே வெண்மீசைக்காரராகக் காணப்படுகிறார்.
🌠 பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இங்கே இரண்டு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். மனித வடிவில் கிருஷ்ணனாகப் பிறந்ததால் இரண்டு கைகள் மட்டுமே அவருக்கு உண்டு.
🌠 பிருகு முனிவரின் மகளாகப் பிறந்த வேதவல்லித் தாயாருக்கு இந்தக் கோவிலில் தனிச் சன்னிதி உள்ளது. பிருகு முனிவரின் வேண்டுதலுக்கிணங்க அப்படி அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேதவல்லித் தாயார் தனிச் சன்னிதியில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.
🌠 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பஞ்ச மூர்த்தித்தலம். இங்கு வேங்கட கிருஷ்ணர், ரங்கநாதர், ராமபிரான், கஜேந்திர வரதர், யோக நரசிம்மர் என்று ஐந்து சன்னிதிகளும் பிரதானமாக இருக்கின்றன. திருக்கச்சிநம்பி, வேதாந்தச்சாரியார், ராமானுஜர், மணவாளமாமுனிகள், சக்கரத்தாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் சன்னிதிகள் பிராகாரத்தில் இருக்கின்றன.
பிரார்த்தனை :
👉 பார்த்தசாரதி திருக்கோவிலில் குடி கொண்டுள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். பார்த்தசாரதி பெருமாளை வேண்டினால் கல்யாணம், குழந்தை, குடும்ப ஐஸ்வர்யம் ஆகிய வரங்களை அள்ளி அருளுபவர் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
ஓம்நமோ நாராயணாய நமஹ

Thursday, February 09, 2017

தினம் ஒரு திருத்தலம் - பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்!....


பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்
🌀 பழமுதிர்ச்சோலை தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள ஒரு முருகன் கோயிலாகும். இது முருகனின் ஆறுபடை வீடுகளுள் ஒன்று எனக் கருதப்படுகிறது. முருகன் சிறுவனாய் வந்து ஒளவையாரை சோதித்தது இத்தலத்தில் தான்.
சுவாமி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
அம்பாள் : வள்ளி, தெய்வானை
தீர்த்தம் : நூபுர கங்கை
தலவிருட்சம் : நாவல்
தல வரலாறு :
🌠 தமிழ்பாட்டி ஒளவையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் ஒளவைக்கு அருள் புரிந்து, இந்த உலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்.
🌠 ஒரு முறை ஒளவை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, ஒளவை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார்.
🌠 களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா? என்றான்.
🌠 சந்தோஷப்பட்ட பாட்டி வேண்டும் என்றார். உடனே முருகன், பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல், சுட்ட பழத்தையே கொடேன் என்றார்.
🌠 சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. ஒளவை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன், பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள் என்று கூறி சிரித்தான்.
🌠 உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர்.
தலச் சிறப்பு :
🌠 இந்த தலத்தில் 3 அடி உயரத்தில் வேல் உள்ளது. அதற்கு தனி சன்னதி உள்ளது. அதற்கு பால், பன்னீர், தேன் அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர்.
🌠 முன்னர் இந்த வேல் மட்டுமே இங்கு இருந்ததாக வரலாறு. பின்னர் கோவில் அபிவிருத்தி அடைய முருகன்-வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதி உருவாகியது.
🌠 இங்கு வேல் மூலவராக உள்ள முருகப்பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு இருபுறமும் வள்ளி, தெய்வகுஞ்சரி விளங்க நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார்.
🌠 இத்தலத் தீர்த்தமாக நூபுரகங்கை (திருச்சிலம்பாறு) என்ற சுனை உள்ளது. திருமாலின் திருச்சிலம்பிலிருந்து உற்பத்தியாகி வருவதாகக் கூறுவர். இச்சுனை மலை உச்சியிலிருந்து வரும்போது சூரிய ஒளியால் பலவிதங்களில் ஒளிரும்.
பிரார்த்தனை :
👉 குடும்பத்தில் சந்தோஷம் நிலவவும், பொருள் செல்வாக்கு கூடவும் இங்கு வந்து மக்கள் பிரார்த்திக்கின்றனர்.

Wednesday, February 08, 2017

தினம் ஒரு திருத்தலம் - சுவேதாரண்யேஸ்வரர் கோவில், திருவெண்காடு!...

சுவேதாரண்யேஸ்வரர் கோவில் திருவெண்காடு
🌀 திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் ஒன்பது நவக்கிரக கோவில்களுள் ஒன்றாகும். இவை 1000 - 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும்.
அதிசயங்கள் :
🌿 மூர்த்திகள் - சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி
🌿 சக்திகள் - பிரம்ம வித்யாநாயகி, காளிதேவி, துர்க்கை
🌿 தீர்த்தங்கள் - சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம்
🌿 தலவிருட்சங்கள் - வடவால், வில்வம், கொன்றை.
தல வரலாறு :
🌠 முன்னொரு காலத்தில் மருத்துவன் என்ற அசுரன் தனக்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்காக பல்வேறு ரிஷிகளின் ஆலோசனையை ஏற்று சிவனை வேண்டி நடுக்கடலில் நெடுங்காலமாக பெரும் தவம் இருந்தான்.
🌠 அவனது தவத்தை மெச்சிய சிவபெருமான் மருத்துவன் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
🌠 அச்சமயத்தில் அசுரன், சிவனிடம் உள்ள சூலாயுதத்தை கேட்டான். அந்த சூலாயுதத்தை எடுத்து சிவபெருமான் அவனுக்கு வழங்கினார். அதனை பெற்ற மருத்துவாசுரன் நல்ல காரியங்களை செய்யாமல், உலகத்தில் உள்ள தேவர்களை துன்புறுத்தினான். அவனால் துன்புறுத்தப்பட்டவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.
🌠 உடனே சிவபெருமான் தனது வாகனமான நந்தியை அவனிடம் அனுப்பினார். நந்திபகவான் மருத்துவாசுரனிடம் சென்று அறிவுரைகளை கூறினார். அதனை ஏற்காத மருத்துவாசுரன் நந்தியை போருக்கு அழைத்தான்.
🌠 அப்போது ஏற்பட்ட சண்டையில் மருத்துவாசுரன் நந்தியை தாக்கி, அதன் கொம்பை முறித்தான். மேலும், நந்தியின் உடலில் 9 இடங்களில் காயத்தை ஏற்படுத்தினான். திருவெண்காடு ஆலயத்தில் உள்ள நந்தியின் உடலில் காயங்களையும், கொம்பு முறிக்கப்பட்டு இருப்பதையும் தற்போதும் காணலாம்.
தலச் சிறப்பு :
🌠 இக்கோவில் காசிக்கு இணையான திருத்தலமாக கருத்தப்படுகிறது. இத்தலம் காவிரிக் கரையில் அமைந்துள்ளது.
🌠 திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
🌠 சிவபெருமானின் 64 வடிவங்களில் 43வது வடிவம் அகோரமூர்த்தி. திருவெண்காட்டில் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது.
🌠 புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம்.
🌠 சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
🌠 மூலவர் உட்புறச் சுவரில் தலப்பதிக கல்வெட்டுகள் உள்ளன.
பிரார்த்தனை :
👉 இங்கு குழந்தைகள் கல்வியில் மேன்மையடைய பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
👉 குழந்தை பேறு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கவும் இங்கு மக்கள் பிரார்த்திக்கின்றனர்

Tuesday, February 07, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு சரஸ்வதி கோவில், கூத்தனூர்!...

📖 கூத்தனூர் சரஸ்வதி கோவில், இந்து மதப்புராணங்களில், கல்விக் கடவுளாக குறிப்பிடப்படும் சரஸ்வதி தேவிக்காகக் கட்டப்பட்ட அரிய கோவில்களுள் ஒன்றாகும்.
📖 கூத்தனூர் சரஸ்வதி கோவில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில், பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோவில் உள்ளது.
தல வரலாறு :
📖 சத்தியலோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும், சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது.
📖 கல்விக்கரசியான தன்னாலேயே சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத் தொழிலால்தான் சத்தியலோகம் பெருமையடைகிறது என்று பிரம்மனும் வாதிட, வாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் சபித்து விட்டனர்.
📖 இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். அவர்களுக்கு திருமணவயது வந்த போது பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர்.
📖 அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பெற்றோருக்கு இவ்விஷயம் தெரிய வந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர்.
📖 சிவபெருமான் அவள் முன் தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வது என்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கு என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக அவள் கூத்தனூர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள்.
📖 சரஸ்வதி தேவியை தேடி சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து குப்த கங்கையாக காட்சி அளிக்கிறது.
தலச் சிறப்பு :
📖 தமிழ்நாட்டிலேயே, சரஸ்வதி தேவிக்கென தனியாக அமைக்கப்பெற்ற ஒரே கோவிலாகும்.
📖 சரஸ்வதி தேவி குடியிருக்கும் கருவறைக்கு மேலே ஐந்து கலசங்களுடன் ஒரு கோபுரம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சரஸ்வதி தேவி வெண் தாமரைப் பு+வில் அமர்ந்திருக்கிறார். வெண்பட்டு உடுத்தியிருக்கிறார். வலது கரத்தில் சின்முத்திரையுடனும், இடது கரத்தில் புத்தகத்துடனும், வலது மேல் கையில் அட்சர மாலையுடனும், இடது மேல் கையில் அமுத கலசத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சி தருகிறார்.
📖 இவ்வவூர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் தன் அவைப்புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டது. எனவே அவரது பெயரால் 'கூத்தனூர்' ஆனது. ஒட்டக்கூத்தர் தான் இக்கோவிலைக் கட்டினார் என்று தலபுராணம் சொல்கிறது.
பிரார்த்தனை :
📖 பள்ளிக்குச் சேர்க்கும் முன்பாக குழந்தைகளை அழைத்து வந்து ஆசி பெற்றுச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
📖 பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து தம் தேர்வு எண்களைக் குறித்து வைப்பதும் உண்டு.
📖 கலைமகள் தமக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்!.....

💐 தட்சன், சூரியபகவான் மற்றும் அக்னிதேவன் ஆகிய மூவரும் சாப விமோச்சனம் பெற்ற தலமாக விளங்குகிறது நாகை மாவட்டம், பொன்னூர் கிராமத்தில் இருக்கும் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்.
மூலவர் - ஆபத்சகாயேஸ்வரர், இலிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், இரதீசுவரர்.
அம்மன் - பெரியநாயகி, பிருகந்நாயகி.
தல விருட்சம் - எலுமிச்சை.
தீர்த்தம் - அக்னி, வருண தீர்த்தம்.
ஆகமம் - காமீகம்.
பழமை - 1000 வருடங்களுக்கு முன்.
புராணப் பெயர் - திருஅன்னியூர்.
ஊர் - பொன்னூர்.
மாவட்டம் - நாகப்பட்டினம்.
தல வரலாறு :
💐 பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன், தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அசுரர்களிடம் இருந்து தங்களை காத்தருளும் படி சிவனை வேண்டச் சென்றனர்.
💐 அச்சமயம் சிவபெருமான் யோகத்தில் இருந்ததால் தேவர்கள் மன்மதனின் உதவியால் சிவபெருமானின் யோகத்தை களைத்தனர். கோபம் கொண்ட சிவபெருமான், மன்மதனை எரித்து விட்டார். மனம் கலங்கிய மன்மதனின் மனைவி ரதிதேவி, சிவபெருமானிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள்.
💐 சிவபெருமான் உரிய காலத்தில் மன்மதன் உயிர்பெற்று வருவான் என்று கூறினார்.
💐 கணவன் விரைவில் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவபெருமானை எண்ணி தவமிருந்து வழிபட்டாள் ரதிதேவி. மன்மதன் சிவபெருமான் அருளால் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனுக்கு மீண்டும் வாழ்வு அளித்தார்.
💐 பிறகு, இத்தல இறைவனை மன்மதன் ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
தல சிறப்பு :
💐 இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இவரது இன்னொரு பெயர் அக்னிபுரீஸ்வரர் ஆகும். மேலும் இங்கு ஆதிசங்கரருக்கும் சன்னிதி உள்ளது.
💐 வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம்.
💐 இத்தல சுவாமியை வருணன், அரிச்சந்திரனும் வழிபட்டுள்ளனர்.
💐 பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.
💐 சனி தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
💐 பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் இருக்கின்றனர். தந்தையான சூரியனுக்கு அருகில் இருந்தாலும், இங்கு சனி, சுபசனீஸ்வரராகவே இருக்கிறார்.
பிரார்த்தனை :
💐 ஆடிப்பூரம், ஆவணி மூலம் நட்சத்திரத்தன்று திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இதனால், விரைவில் திருமணம் நடக்கவும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும், மேலும் மனக்குறைகள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். மேலும் முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி பூஜை செய்பவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

அழுகிய தேங்காய் அபசகுனமா?

அழுகிய தேங்காய் அபசகுனமா?
  எப்பொழுதும் வீட்டில் நல்ல காரியங்கள் செய்யும் போது பயன்படுத்தும் முக்கியப் பொருள் தேங்காய். ஒரு கண், இரண்டு கண், மூன்று கண் என தேங்காய் மூன்று கண்களை கொண்டுள்ளது. அதில் தேங்காயின் முதல் கண் பிரம்மனாகவும், இரண்டாவது கண் லஷ்மியாகவும், மூன்றாவது கண் சிவனாகவும் போற்றப்படுகிறது.
👉 கடவுளுக்கு நம்முடைய உள்ளத்தின் சுத்தத்தைக் காண்பிக்க தேங்காயில் சில சகுனங்கள் உண்டு.
👉 தேங்காய் உடைக்கும் பொழுது அழுகி இருந்தால் தேவையில்லாத பயம், குழப்பம், கலக்கம், ஏமாற்றம் அடைந்ததாக எண்ணிக்கொள்வார்கள்.
👉 ஒரு சிலர் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதை போல தானும் பயந்து மற்றவர்களையும் பயமுறுத்துவார்கள்.
ஆனால் அழுகிய தேங்காய் ஆனந்தத்தின் அறிகுறி...!
👉 அழுகிய அனைத்து தேங்காயும் காரிய சித்தி ஆகுவதற்கான அறிகுறியாகும். ஒரு துணியை எடுத்து நீரில் நனைத்து அழுக்கை துடைத்து பிழிந்தால் அழுக்கு நீர் தான் வரும் அதே போல தான் உங்கள் பீடை, துர்சகுனங்கள், கண்திருஷ்டி ஆகியவை அனைத்தும் பிரார்த்தனை செய்து உடைக்கும் தேங்காயில் விலகியதன் அறிகுறியை காட்டுகிறது.
👉 முழு கொப்பரையாக இருந்தால் சுபகாரியம், புத்திர பாக்யம் உண்டாகும், பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
👉 அடுத்து, தேங்காயில் பு+ இருந்தால் எதிர்பாராத வரவு மற்றும் லாபம் ஏற்படும்.
நீங்கள் உங்களையோ அல்லது கடவுளையோ மட்டும் முழுமையாக நம்பினால் போதும் மற்றவை அனைத்தும் நல்லபடியாக நடக்கும்....!

Sunday, February 05, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவொற்றியூர்!...

சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவொற்றியூர்
🌠 பிரம்மா சிவனைநோக்கி கடுமையான தவம் இருந்த இடம், பண்டைய காலத்தில் கற்றலுக்கு ஒரு சிறந்த மையமாக இருந்ததும் மற்றும் பூலோகத்தில் உள்ள சிவலோகம் போன்ற பெருமைகளை உடையது சென்னை, திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வடிவுடைஅம்பாள் சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில்.
இறைவன் - ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர் மாணிக்கம்.
இறைவி - திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை, வடிவுடை.
தலமரம் - மகிழ மரம்.
தீர்த்தம் - பிரம தீர்த்தம்.
புராண பெயர் - ஆதிபுரி.
ஊர் - திருவொற்றியூர்.
மாவட்டம் - சென்னை.
தலவரலாறு :
🌠 வைகுண்டத்தில் என்பெருமானின் நாபிக்கமலத்தில் இருந்து பிறந்த பிரம்மன் உலகை படைக்க துவங்கினார். அதற்கு முன்னதாகவே இந்த உலகில் ஒரு நகரம் அமைந்திருந்தது.
🌠 அப்போது பிரம்மா! நான் உலகைப் படைக்கும் முன் இந்த நகரத்தைப் படைத்தது யார்? எனக்கு மேல் ஒருவரா? யார் அவர் என்று பரந்தாமனிடம் கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு, அந்த நகரை ஆதிபகவானான சிவன் உருவாக்கினார். அவர் பெயர் ஆதிபுரீஸ்வரர் எனப்படுபவர். அந்நகரத்தின் பெயர் ஆதிபுரி ஆகும். திருவொற்றியூர் என்றும் அழைக்கப்படுகிறது.
🌠 அந்நகருக்கு சென்று ஆதிபுரீஸ்வரரை வணங்கி, படைக்கும் தொழிலை தொடர்வாயாக என்றார் பெருமாள். பிரம்மனும் திருவொற்றியூர் வந்து சிவனை வழிபட்டார். உலகை பிரம்மன் படைப்பதற்கு வசதியாக ஆழி சூழ்ந்த கடல் நீரை ஒத்தி (விலகி) இருக்க சிவன் உத்தரவிட்டார். எனவே இவ்வூர் 'ஒத்தியூர்" எனப்பட்டது. இதுவே காலப்போக்கில் 'ஒற்றியூர்" என மாறியது.
தல சிறப்பு :
🌠 பிற்காலத்தில் பிரம்மாவின் வேண்டுகோளிற்கிணங்க சிவன் சுயம்புவாக தோன்றினார் (சுயம்பு என்றால் மண்ணில் உள்ள கல் தானாகத் தோன்றுவது).
🌠 சுமார் இரண்டாயிரத்து ஐநு}று வருடங்களுக்கு மேற்பட்ட இந்த ஆலயம் பூலோகத்தில் உள்ள சிவலோகமாக போற்றப்படுகிறது. ஆதிசேஷன் என்னும் நாகராஜன் ஈசனை சுமக்கும் பாக்கியம் பெற்றான். இந்த ஆலயத்திற்கு அந்த நாகராஜன் வந்து ஈசனை வணங்கி வரங்களை பெற்றான்.
🌠 பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும். கலிய நாயனார், பெருமானார் தொண்டு செய்த தலமாகும். கலையழகும், வரலாற்று சிறப்புமிக்கதுமான அழகிய சிற்பங்கள் கொண்டது. ஆலய கோபுரம், தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பாவ விமோசனமளிக்கிறது.
🌠 திருவொற்றியூர் கோயிலுக்கு வெளியே பிரம்மாண்டமான பிரம்மதீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை தலையில் தௌpத்தாலே பாவங்கள் நீங்கிவிடும். பாவ மன்னிப்பு கேட்காமலேயே பாவங்களை தீர்க்கும் தலம் திருவொற்றியூர்.
🌠 இவ்வூரில் உள்ள கற்கள் அனைத்தும் லிங்கங்கள் என்றும், சிதறிக்கிடக்கும் மண் திருநீறு என்றும் சொல்லப்படுகிறது. பட்டினத்தார் இங்குதான் ஜீவசமாதி அடைந்தார். இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும். மாசி மக திருவிழாவின் பத்தாம் நாளில் இந்த சன்னதியில் 18 வகை நடனகாட்சி நடக்கிறது.
🌠 திருவொற்றியூரில் சரித்திரப் புகழ்பெற்ற வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கோவில் உள்ளது. அருணகிரிநாதர், பட்டினத்தார், ராமலிங்க சுவாமிகள், சுந்தரர், திருஞானசம்பந்தர், கம்பர் இன்னும் பல அடியவர்களால் பாடப் பெற்று புகழ் கொண்டது இத்தலம்.

அவிநாசி சிவனின் அற்புதங்கள்

""இது கோயிலுக்குள் இருக்கின்ற ஒரு சாதாரண தீர்த்தக் கிணறுதானே? இதைப் போய் கங்கை என்று சொல்கிறீர்களே...?''- பதஞ்ஜலி முனிவரிடம் இன்னொரு ரிஷி இப்படிக் கேட்டார். பதஞ்ஜலி புன்னகைத்தார். ""நண்பரே! காசியில் விஸ்வநாதர் இருக்கின்றாரே, அந்தச் சிவலிங்கத்தின் வேர் ஒன்று தென் கோடி வரை நீண்டு, இதோ இந்தக் கோயிலில் இன்னொரு சிவலிங்கமாக
முளைத்திருக்கிறது. அதுதான் நாம் பார்க்கின்ற அவிநாசி லிங்கம். காசி விஸ்வநாதருக்கு இணையான மூர்த்தி என்பதால் இந்தச் சிவனுக்கு, "வாராணஸிக் கொழுந்து' என்றொரு பெயரே உண்டு. இந்தக் கிணற்றையும், "காசிக் கிணறு' என்றுதான் சொல்வார்கள்'' என்றார் பதஞ்ஜலி.
ஆனால் சக முனிவருக்கு முழு நம்பிக்கை வரவில்லை. அதை உணர்ந்த பதஞ்ஜலி, தன் கையிலிருந்த தண்டத்தை எடுத்து காசிக் கிணற்றில் போட்டார். பிறகு, ""போகலாம் வாருங்கள்'' என்று நண்பரை அழைத்தார்.
இருவரும் பல மாதங்கள், பற்பல கோயில்களாகத் தரிசித்துக் கொண்டேபோய் கடைசியில் வாராணஸி என்றழைக்கப்படும் காசி மாநகரை அடைந்தார்கள். அங்கே கங்கையில் நீராட இறங்கினார்கள். அப்போது அந்தப் புண்ணிய நதி, தன் அலைக்கரங்களால் பதஞ்ஜலியின் தண்டத்தை சுமந்து வந்து அவரிடமே சேர்ப்பித்தது. இதைப் பார்த்த பதஞ்ஜலியின் நண்பர், வியப்பால் கை குவித்தார். காசிக் கிணற்றில் உள்ள தண்ணீர், கங்கை நீர்தான் என்ற பேருண்மையை உணர்ந்தார். அவர் மனதும் கங்கா பிரவாஹம் ஆகி, அவருடைய கண்களிலும் ஆனந்த கங்கை பொங்கியது. இப்படிப்பட்ட புண்ணியக் கிணறு இருக்கும் ஆலயம் அவிநாசியில் உள்ளது.
அவிநாசியில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற அற்புதங்களைப் பட்டியலிட்டு மாளாது.
கேரள நாட்டு அந்தணன் ஒருவன், பாவங்களால் பேய் வடிவம் பெற்றான். இங்கே வந்து வணங்கியதும் தேவ வடிவம் பெற்று சிவலோகம் சேர்ந்தான்.
குருநாத பண்டாரம் என்பவர், தனது பூஜையில் சிவலிங்கம் வைத்து அன்றாடம் வழிபடுவார். அரசாங்க அதிகாரிகள், பண்டாரத்தின் மகிமை தெரியாமல் அந்த லிங்கத்தைப் பிடுங்கி அவிநாசி ஆலயத் தெப்பக் குளத்தில் எறிந்தனர். பிற்பாடு அங்குள்ள பெரிய மீன் ஒன்று அந்தச் சிவலிங்கத்தை வாயில் ஏந்தி வந்து பண்டாரத்திடம் சேர்ப்பித்தது.
கொங்கு நாட்டை வீர விக்கிரம குமார சோளியாண்டான் ஆண்டு கொண்டிருந்தபோது மந்திரவாதி ஒருவன் அவிநாசியப்பரின் தேர்ச் சக்கரங்களை மந்திரங்களால் நகராதபடி செய்தான். அப்போது அந்த ஊரில் இருந்த வள்ளல் தம்பிரான் என்ற அருளாளர், அவிநாசி இறைவனை மனதார தியானித்து நான்கு சக்கரங்களிலும் திருநீற்றை வீசினார். மந்திரக் கட்டு நீங்கி, தேர் நகர்ந்தது. இது கண்டு மகிழ்ந்த சோளியாண்டான், "வருடா வருடம் தேர் திருவிழாவன்று வள்ளல் தம்பிரானுக்குத்தான் முதல் மரியாதை. தம்பிரானின் காலத்துக்குப் பின் அவருடைய வாரிசுகளுக்கு அந்த மரியாதை வழங்கப்படும்'' என்று அறிவித்தான். இன்றும் தம்பிரானின் வாரிசுகள், தேர்த் திருவிழாவன்று முதல் மரியாதை பெறுகின்றார்கள்.
இப்படித் தோண்டத், தோண்ட அற்புதச் சம்பவங்களாகவே அள்ளித் தரும் அவிநாசியில், சைவ சமயக் குரவர்களில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் செய்த அருஞ்செயல், என்றென்றும் சைவ மக்களால் வியந்து கூறப்படும் விஷயமாகும்...
ஓம் நமசிவாய...

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர், காளையார் கோவில் !...சிவகங்கை

அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது.
சொர்ணகாளீஸ்வரர் கோவில் சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
மூலவர்:சொர்ணகாளீஸ்வரர்.
தாயார்:சொர்ணவல்லி.
தல மரம்:மந்தாரை.
தல விருட்சம்:கொக்கு மந்தாரை.
தீர்த்தம்:கஜபுஷ்கரணி, சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம்.
புராண பெயர்கள் :திருக்கானப்பேர்.
ஊர்:காளையார் கோவில்.
மாவட்டம்:சிவகங்கை.
தல வரலாறு :
🌀 ஒரு முறை சுந்தரர் விருதுநகர் அருகிலுள்ள திருச்சுழி திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோவிலுக்கு சென்றார். ஊர் எல்லைக்குள் வந்தவுடன் கோவிலுக்கு செல்லும் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தன்னுடைய கால்களை பதிக்க தயங்கிய அவர், இறைவா! உன்னை காண முடியவில்லையே என மிகவும் மனம் வருந்திப் பாடினார்.
🌀 அப்போது சிவபெருமான், தனது நண்பரான சுந்தரர் மீது இரக்கம் கொண்டு தனது காளையை அனுப்பி சுந்தரர் நின்ற இடம் வரை சென்று மீண்டும் திரும்பி செல்ல வைத்தார். அந்த காளையின் கால் பதிந்த இடங்களில் லிங்கம் இல்லை என்று உணர்ந்தார் சுந்தரர். காளையின் கால் பதிந்த இடங்களில் தான் நடந்து வந்து தன்னை தரிசிக்கலாம் என அசரீரி ஒலிக்கவே, சுந்தரர் மகிழ்வுடன் அவ்வழியில் சென்று தரிசனம் செய்தார்.
🌀 காளை வழிகாட்டிய தலம் என்பதால் இவ்வூர் காளையார் கோவில் என பெயர் பெற்றது.
தல சிறப்பு :
🌀 இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். சகஸ்ரலிங்கம் இத்தலத்தில் உள்ளது. தங்கத்தால் ஆன பள்ளியரை இங்கு உள்ளது.
🌀 பொதுவாக ஒரு கோவிலில் ஒரு மூலவரும், ஒரு அம்பாளும் மட்டுமே இருப்பார்கள்.
🌀 காஞ்சிபுரத்தில் உள்ள ஓணகாந்தன்தளியில் மூன்று சிவன் சன்னிதிகள் உள்ளன. ஆனால் அம்மனுக்கு சன்னிதி கிடையாது.
🌀 சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் மூன்று சிவன், மூன்று அம்பாளுக்கும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
🌀 சோமேசர் சன்னிதிக்கு எதிரில் உள்ள பெரியகோபுரம் மருதுபாண்டியரால் கட்டப்பெற்றது. இக்கோபுரத்தின் மீதேறிப்பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியுமாம்.
🌀 நீராழி மண்டபத்துடன் கூடிய பெரிய தெப்பக்குளம் கஜபுஷ்கரணி தீர்த்தம் (யானை மடு) உள்ளது. கோவிலின் எதிரில் மருதுபாண்டியர் சமாதி இருக்கிறது.
🌀 இந்திரன் தனக்கு ஏற்பட்ட சபதத்தை போக்க, பல சிவாலயங்களை தரிசித்து வந்தான். இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான்.
🌀 இங்குள்ள மூன்று சன்னிதிகளில் தேவாரப்பாடல் பெற்றவர் காளீஸ்வரரே.
பிரார்த்தனை :
🌀 இங்குள்ள சுவாமியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மற்றும் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

Friday, February 03, 2017

தினம் ஒரு திருத்தலம் - ரங்கநாதர் திருக்கோவில், திருவரங்கம் !...

ரங்கநாதர் திருக்கோவில் திருவரங்கம்
❂ பிரம்மனுக்கு உபதேசம் தந்து, வேதங்களை மீட்டுத் தந்த தலம், சந்திரன் தன் தொழில் வலிமையை திரும்பப் பெற்ற கோவில், ஸ்ரீரங்கத்திற்கும் முந்தைய ஆலயம், சயனக் கோலத்தில் முதன்மை பெற்ற திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டு திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவரங்கம் ரங்கநாதர் திருக்கோவில்.
சுவாமி : ரங்கநாத பெருமாள்.
அம்பாள் : ரங்கவள்ளி தாயார்.
தீர்த்தம் : சந்திரபுஷ்கரணி, தென் பெண்ணைநதி.
விமானம் : சந்தோமய விமானம்.
மாவட்டம் : விழுப்புரம்.
தல வரலாறு :
❂ சோமுகன் என்ற அசுர குல அரசன், தான் மேற்கொண்ட கடுமையான தவங்களின் மூலம் பல்வேறு வரங்களை பெற்றான். அதனால் அவன் ஆணவம் கொண்டு பூவுலகையும், தேவலோகத்தையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் எனவும், முனிவர்களும் தேவர்களும், தனக்கு அடிமையாக இருந்து சேவை செய்ய வேண்டும் எனவும் ஆசைப்பட்டான்.
❂ அதன்படியே பூலோகத்தையும், தேவலோகத்தையும், மக்களையும், தேவர்களையும், முனிவர்களையும் தன் வசப்படுத்தி, துன்புறுத்தினான். படைக்கும் தெய்வமான பிரம்மனையும் சிறைபிடித்து, அவரிடம் இருந்த வேதங்களைப் பறித்துக்கொண்டான். அதன்பின் தேவர்கள், முனிவர்கள் அனைவரும் திருமாலை சரணடைந்தனர். அவர் அசுரனுடன் போரிட்டார். போரில் தோல்வியை தழுவும் நிலைக்குச் சென்ற அசுரன், திருமாலுக்கு பயந்து, கடலுக்குள் புகுந்து பதுங்கினான்.
❂ அசுரனை அழிப்பதற்காக திருமால் மச்ச அவதாரம் எடுத்து, சோமுக அசுரனை வதம் செய்து கொன்றார். பின்னர் வேதங்கள் அனைத்தையும் மீட்டார்.
❂ பூமிக்கு மேலே வெளிவந்த திருமால், பிரம்மனிடம் வேதங்களை ஒப்படைத்து அவருக்கு உபதேசமும் அருளினார். அந்த இடத்தில் இருந்த அழகிய சோலையும், வற்றாத நதியும் பார்த்த திருமால் அங்கேயே தங்க ஆசைப்பட்டார். ஆனால், திருப்பாற்கடலுக்குத் திரும்ப வேண்டும் என பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் வேண்டினர். முனிவர்களும், மற்றவர்களும் இதே இடத்தில் இருக்க வலியுறுத்தினர்.
❂ திருமால் தேவதச்சனான விஸ்வகர்மாவை அழைத்து, தம்மைப்போன்ற உருவத்தினை பள்ளிகொண்ட கோலத்தில் உருவாக்கிட கூறினார். அதன்பின் தேவர்களும், முனிவர்களும் ஒன்று சேர்ந்து பிரம்மோற்சவத்தை நடத்தினர் என்கிறது தல புராணம்.
தலச்சிறப்பு :
❂ 108 திவ்ய தேச கோவில்களில், திருவரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் ஆனது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். மேலும் இந்த கோவில் ஆனது அனைத்தையும் விட சிறப்பானது மற்றும் பழமையானது ஆதி திருவரங்கம். ஏன் என்றால் ஆதி திருவரங்கம் திருமாலின் முதல் அவதாரத்தில் நிர்மாணிக்கப்படுகிறது. ஆதி திருவரங்கம் அடுத்து ஸ்ரீரங்கம் என்ற சொல் இங்கு அனைத்து பகுதிகளிலும் பேசப்பட்டு வருகிறது.
❂ தமிழகத்திலேயே மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் 'பெரிய பெருமாள்" என அழைக்கப்படுகிறார்.
ரங்க விமானம் :
❂ திருவரங்கத்தில் இருக்கும் 'ரங்க விமானம்" ஆதியில் தானாகவே உருவானதாக கூறப்படுகிறது. இதைச் சுற்றி 24 கிலோமீட்டர் தூரத்துக்குள் எங்கே இருந்தாலும் முக்தி நிச்சயம் என்கிறார்கள். இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு 'ஓம்" என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது. பிரம்ம தேவன், பல ஆயிரம் ஆண்டுகள் மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததன் பலனாக, பாற்கடலில் இருந்து பெறப்பட்டது ரங்க விமானம்.
❂ நான்கு வேதங்களையும் பிரம்மா இந்த விமானத்தின் முன் ஓதியிருக்கிறார். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்த ரங்க நாதரை, இசவாகு மன்னர் தன் குல தெய்வமாக அயோத்தியில் வைத்து பூஜை செய்து வந்தார்.
தினம் ஒரு திருக்கோயில்
அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி!....
🌠 பிரம்மா வழிபட்டு, திருமால் பூஜை செய்து, கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததும், மேருமலையின் ஒரு துண்டு வைரக்கல்லாகி விழுந்த இடத்தை தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவதும், போன்ற பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேஸ்வரர் கோவில்.
சிவஸ்தலம் பெயர் : திருப்பாண்டிக்கொடுமுடி.
இறைவன் பெயர் : கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி.
இறைவி பெயர் : வடிவுடைநாயகி, சௌடாம்பிகை.
அம்மனின் பெயர் : திரிபுர சுந்தரி, மதுரபாஷினி.
தல விருட்சம் : வன்னி.
தீர்த்தம் : தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவிரி.
ஆகமம் : சிவாகமம்.
தல வரலாறு :
🌠 முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யார் வலிமை மிக்கவர் என்ற போட்டியில், ஆதிசேஷன் மேருவை கட்டி அணைத்துக் கொள்ள, வாயு பகவான் தனது வேகத்தால் பலமாக சூறாவளி காற்றை வீசி ஆதிசேஷனை மேருவில் இருந்து கீழே தள்ள முயன்றார்.
🌠 அப்போது மேரு மலை சிதறி ஐந்து துண்டுகளாக பூமியில் விழுந்தன. அவை ஒவ்வொன்றும் ரத்தினமாக மாறி லிங்கங்களாக ஆனது. இவற்றில் வைரக்கல் கொடுமுடியில் விழுந்தது. அதனால் வைரக்கல்லால் ஆன லிங்கமாக இறைவன் குடியிருப்பதாக ஐதீகம்.
🌠 மேருவில் இருந்து சிதறி வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர, வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும்.
🌠 மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார். கொடு என்றால் மலை, முடி என்றால் சிகரம். மலை சிகரமே மூலஸ்தானமாக உள்ளதால், மூலவர் கொடுமுடிநாதர் என அழைக்கப்படுகிறார்.
தல சிறப்பு :
🌠 காவிரியின் மேல் கரையில் உள்ள இக்கோவில் பல தீர்த்தங்களை உடையது. காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், மகாவிஷ்ணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி, சூன்யம் போன்ற குற்றங்களும், மனநோயும் நீங்கும், தரிசித்த மாத்திரத்தில் பிறவியை போக்கி முக்தியை தருவது, சுயம்பு மூர்த்தியாகிய மகுடலிங்கர் கோவிலாகும்.
🌠 உலகை சமநிலைப்படுத்த செல்லும் போது கயிலையில் நடந்த பார்வதி, பரமேஸ்வரன் திருமணக் காட்சியை அகத்தியர் கண்டுகளித்த இடம் கொடுமுடி.
🌠 இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரங்களும், தனித்தனி சன்னிதிகளும் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.
🌠 ஆதிசேஷனால் உருவான கோவில் என்பதால் இங்கு நாகர் வழிபாடு விசேஷம். காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவ தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மடப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் தீர்த்தங்களாகும்.
🌠 மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின் இக்குறை தீர்ந்தது. எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண்டபங்களும் கட்டி, மேலும் பல திருப்பணிகளைச் செய்தான். பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று.
பிரார்த்தனை :
🌠 ராகு கேது தோஷம் உடையவர்கள் இக்கோவிலில் பரிகாரங்கள் செய்தால் திருமணத்தடை நீங்கும்.
🌠 குழந்தைப்பேறு கிட்டவும் இக்கோவிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.