Monday, February 20, 2017

தினம் ஒரு திருத்தலம் - அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்!...

 அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில் பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவதலம் தற்போது அவிநாசி என்று அழைக்கப்படுகிறது.
கோவில் வரலாறு :
✧ சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது எதிரும் புதிருமாக இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அமங்கல ஒலியும் எழ அதன் காரணத்தைக் கேட்டார். ஐந்து வயதுள்ள இரு அந்தணச் சிறுவர்கள் மடுவில் குளிக்கச் சென்றதாகவும், அவர்களில் ஒருவனை மடுவில் இருந்த முதலை விழுங்கி விட்டதாகவும் கூறினர். மேலும் தப்பிப் பிழைத்த சிறுவன் வீட்டில் அவனுக்கு உபநயனம் நடக்கும் விழா ஒலி என்றும், இறந்த சிறுவனின் வீட்டில் சோகத்தால் அழும் ஒலி என்றும் கூறினர். இறந்த சிறுவனின் பெற்றோர் சுந்தரர் வந்திருப்பதை அறிந்து அவரின் உதவியை நாடினர். மடு இருக்குமிடம் கேட்டு அங்கு சென்று முதலையை அழைக்கும் எண்ணத்துடன் சுந்தரர் 'எற்றான் மறக்கேன்" என்று தொடங்கும் பதிகத்தை இறைவனுக்கு கட்டளை இடும் வகையில் பாடும் போது சிவபெருமான் அருளினால் நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட, முதலை அங்கு வந்து சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை, பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது. இத்தகைய அற்புதம் நிகழ்ந்த சிவதலம் தான் அவிநாசியப்பர் திருக்கோவில் ஆகும்.
கோவில் அமைப்பு :
✧ இக்கோவில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு திசையில் 7 நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது.
✧ கோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் உள்ளன. ராஜ கோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கணபதியின் சிற்பங்கள் உள்ளன. உள்ளே மண்டபத்தின் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
✧ மண்டபத்தில் இருந்து உள் பிரகாரத்தில் நுழைந்தால் மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருக்கிறது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
✧ மூலவர் கர்ப்ப கிரகத்தைச் சுற்றி உள்ள பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் அமைந்துள்ளன.
✧ மேலும் உள் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சிற்பங்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீகாலபைரவர் சந்நிதியும் இத்தலத்தில் சிறப்பிற்குரியது.
✧ நடராஜர் மண்டபத்திலுள்ள ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனி எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது. இத்தலத்தில் பிரம்மா 100 ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் என்னும் யானை 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாகக்கன்னி 21 மாதங்களும் வழிபாடு செய்ததாக ஐதீகங்கள் உண்டு.
✧ இறைவி கருணாம்பிகை சந்நிதி, மூலவர் அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இங்கே அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு கருணாம்பிகை காட்சி தருகிறாள்.
✧ அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பலாம்.
தேர்த்திருவிழா :
✧ சித்திரை மாதத்தில் நிகழும் பிரமோற்சவம், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் கொடியோற்றம் மற்றும் பூரம் நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா ஆகியவை சிறப்பாக இருக்கும். தேர்த்திருவிழாவின் 5 ஆம் நாள் மிகவும் முக்கியமானதாகும். அன்றைய தினம் 63 நாயன்மார்களுக்கு இறைவன் ரிஷபாரூடராக தரிசனம் தருவது சிறப்பாகும்.

No comments: