Sunday, February 05, 2017

அவிநாசி சிவனின் அற்புதங்கள்

""இது கோயிலுக்குள் இருக்கின்ற ஒரு சாதாரண தீர்த்தக் கிணறுதானே? இதைப் போய் கங்கை என்று சொல்கிறீர்களே...?''- பதஞ்ஜலி முனிவரிடம் இன்னொரு ரிஷி இப்படிக் கேட்டார். பதஞ்ஜலி புன்னகைத்தார். ""நண்பரே! காசியில் விஸ்வநாதர் இருக்கின்றாரே, அந்தச் சிவலிங்கத்தின் வேர் ஒன்று தென் கோடி வரை நீண்டு, இதோ இந்தக் கோயிலில் இன்னொரு சிவலிங்கமாக
முளைத்திருக்கிறது. அதுதான் நாம் பார்க்கின்ற அவிநாசி லிங்கம். காசி விஸ்வநாதருக்கு இணையான மூர்த்தி என்பதால் இந்தச் சிவனுக்கு, "வாராணஸிக் கொழுந்து' என்றொரு பெயரே உண்டு. இந்தக் கிணற்றையும், "காசிக் கிணறு' என்றுதான் சொல்வார்கள்'' என்றார் பதஞ்ஜலி.
ஆனால் சக முனிவருக்கு முழு நம்பிக்கை வரவில்லை. அதை உணர்ந்த பதஞ்ஜலி, தன் கையிலிருந்த தண்டத்தை எடுத்து காசிக் கிணற்றில் போட்டார். பிறகு, ""போகலாம் வாருங்கள்'' என்று நண்பரை அழைத்தார்.
இருவரும் பல மாதங்கள், பற்பல கோயில்களாகத் தரிசித்துக் கொண்டேபோய் கடைசியில் வாராணஸி என்றழைக்கப்படும் காசி மாநகரை அடைந்தார்கள். அங்கே கங்கையில் நீராட இறங்கினார்கள். அப்போது அந்தப் புண்ணிய நதி, தன் அலைக்கரங்களால் பதஞ்ஜலியின் தண்டத்தை சுமந்து வந்து அவரிடமே சேர்ப்பித்தது. இதைப் பார்த்த பதஞ்ஜலியின் நண்பர், வியப்பால் கை குவித்தார். காசிக் கிணற்றில் உள்ள தண்ணீர், கங்கை நீர்தான் என்ற பேருண்மையை உணர்ந்தார். அவர் மனதும் கங்கா பிரவாஹம் ஆகி, அவருடைய கண்களிலும் ஆனந்த கங்கை பொங்கியது. இப்படிப்பட்ட புண்ணியக் கிணறு இருக்கும் ஆலயம் அவிநாசியில் உள்ளது.
அவிநாசியில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற அற்புதங்களைப் பட்டியலிட்டு மாளாது.
கேரள நாட்டு அந்தணன் ஒருவன், பாவங்களால் பேய் வடிவம் பெற்றான். இங்கே வந்து வணங்கியதும் தேவ வடிவம் பெற்று சிவலோகம் சேர்ந்தான்.
குருநாத பண்டாரம் என்பவர், தனது பூஜையில் சிவலிங்கம் வைத்து அன்றாடம் வழிபடுவார். அரசாங்க அதிகாரிகள், பண்டாரத்தின் மகிமை தெரியாமல் அந்த லிங்கத்தைப் பிடுங்கி அவிநாசி ஆலயத் தெப்பக் குளத்தில் எறிந்தனர். பிற்பாடு அங்குள்ள பெரிய மீன் ஒன்று அந்தச் சிவலிங்கத்தை வாயில் ஏந்தி வந்து பண்டாரத்திடம் சேர்ப்பித்தது.
கொங்கு நாட்டை வீர விக்கிரம குமார சோளியாண்டான் ஆண்டு கொண்டிருந்தபோது மந்திரவாதி ஒருவன் அவிநாசியப்பரின் தேர்ச் சக்கரங்களை மந்திரங்களால் நகராதபடி செய்தான். அப்போது அந்த ஊரில் இருந்த வள்ளல் தம்பிரான் என்ற அருளாளர், அவிநாசி இறைவனை மனதார தியானித்து நான்கு சக்கரங்களிலும் திருநீற்றை வீசினார். மந்திரக் கட்டு நீங்கி, தேர் நகர்ந்தது. இது கண்டு மகிழ்ந்த சோளியாண்டான், "வருடா வருடம் தேர் திருவிழாவன்று வள்ளல் தம்பிரானுக்குத்தான் முதல் மரியாதை. தம்பிரானின் காலத்துக்குப் பின் அவருடைய வாரிசுகளுக்கு அந்த மரியாதை வழங்கப்படும்'' என்று அறிவித்தான். இன்றும் தம்பிரானின் வாரிசுகள், தேர்த் திருவிழாவன்று முதல் மரியாதை பெறுகின்றார்கள்.
இப்படித் தோண்டத், தோண்ட அற்புதச் சம்பவங்களாகவே அள்ளித் தரும் அவிநாசியில், சைவ சமயக் குரவர்களில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் செய்த அருஞ்செயல், என்றென்றும் சைவ மக்களால் வியந்து கூறப்படும் விஷயமாகும்...
ஓம் நமசிவாய...

No comments: