Thursday, January 07, 2016

சாபங்கள்

சாபங்கள் பல்வகை...காண்போமா!!
இந்த கேள்விக்கு பதில் பலருக்கும்
புரியாத புதிராகவே உள்ளது. எல்லோரும் நினைத்த நேரத்தில் கண்ட கண்ட காரணங்களுக்காக நியாயமே இல்லாமல் கொடுக்கும் சாபங்கள் எல்லாம் பலிக்காது,
நியாயமான காரணங்களுக்காக மனம் நொந்து சபித்தால் மட்டுமே சாபங்கள் பலிக்கும்.
இப்படி மனிதனுக்கு வாழ்வில் வரும் சாபங்கள் மற்ற மனிதர்கள் கொடுக்கும் சாபம் மட்டுமல்ல, இவையன்றி பல வகைகளிலும் சாபங்கள் உண்டாகின்றன, அப்படிப்பட்ட சாபங்கள் பல வகைப்படும்.
அவை பெண் சாபம், பிரேத சாபம், பித்ருசாபம், சர்ப்பசாபம், கோசாபம், பூசாபம் (பூமி சாபம்), கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், முனி சாபம், பிரம்ம சாபம் மற்றும் குல தெய்வ சாபம்.
1.பெண் சாபம் :
------------------------
பெண்களை ஏமாற்றுதல், சகோதரிகளை, தாயை ஆதரிக்காமல் கைவிடுவது, மனைவியை கைவிடுவது ஏமாற்றுவது மனம் நோகும்படி செய்வது இந்த காரணங்களால் பெண் சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக வம்சம் நாசமாகும்.
2.பிரேத சாபம் :
------------------------
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாக பேசுவது, பிணத்தை தாண்டுவது, இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவரின் உடலை உறவினர்கள் பார்க்கவிடாமல் தடுப்பது, சாவு நடந்த வீட்டில் இருந்து 98 அடி வரை தீட்டு உண்டு அந்த எல்லைக்குள் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் உடலை அடக்கம் செய்யும் முன்பு உணவு உண்பது, தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வது போன்ற காரணங்களால் பிரேத சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக வியாதிகள், அவமானங்கள், கடன்கள், அற்ப ஆயுள், ஆயுள் குறைவு உண்டாகிறது.
3.பிரம்ம சாபம் :
---------------------------
வித்தை கற்று தந்த குருவை மறப்பது, நிந்திப்பது, தவறாக பேசுவது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, கற்ற வித்தையை பிறருக்கு சொல்லிக்கொடுக்காமல் மறைப்பது போன்ற காரணங்களால் பிரம்ம சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக வித்யா நட்டம் என்னும் கல்வியில் குறைபாடு உண்டாகிறது.
4. சர்ப்ப சாபம் :
------------------------
பாம்புகளை தேவையின்றி கொல்வது, அவற்றின் இருப்பிடங்களை தேவையின்றி அழிப்பது போன்ற காரணங்களால் சர்ப்ப சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக திருமண தடை, செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் முதலியன உண்டாகிறது.
5. பித்ரு சாபம் :
-----------------------
தாய் - தந்தை, தாத்தா - பாட்டி ஆகியோர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்யாமல் இறுதி காலத்தில் அவர்களை தவிக்கவிடுவது, உதாசீனப்படுத்துவது, ஒதுக்கிவைப்பது, அவர்கள் இறந்த பின்பு செய்ய வேண்டிய திதி பரிகாரங்களை செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் பித்ரு சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக ஆண்வாரிசுகள் இல்லாமல் போகும், பலரிஷ்ட்ட தோஷத்தால் குழந்தைகள் இறக்கும்.
6. கோ சாபம் :
---------------------
பசுவை வதைப்பது, பால் வற்றிய பசுவை இறைசிக்காக வெட்ட கொடுப்பது, கன்றையும் - பசுவையும் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்க மறுப்பது, பசுவுக்கு போதிய உணவளிக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக வாழ்வில் வளர்சிகள் இல்லாமல் தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும்.
7. பூ (பூமி) சாபம் :
----------------------------
ஆத்திரத்தால் பூமியை சதா காலால் உதைப்பது, பூமியை பாழ்படுத்துவது, பூமியை சீர் கேடாக்கும் பொருட்களை பூமியில் புதைப்பது, தேவையற்ற பள்ளங்களை உண்டாக்குவது, பிறரின் பூமியை அபகரிப்பது போன்ற காரணங்களால் பூ ( பூமி ) சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக வாழ்வில் நரக வேதனை அடைய நேரிடும்.
8. கங்கா சாபம் :
--------------------------
பலர் அருந்தக்கூடிய நீரை பாழாக்குவது, நீரை தேவைக்கு அதிகம் வீணாக்குவது, ஓடும் நதியை அசுத்தம் செய்வது போன்ற காரணங்களால் கங்கா சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக உடலில் நீர் சம்பந்தமான நோய்கள் உண்டாகி வாட்டும், நம் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும்.
9. விருட்ச சாபம் :
------------------------------
பசும் மரத்தை வெட்டுவது, கனி கொடுக்கும் மரத்தை பட்டுப் போக செய்வது, மரங்களை எரிப்பது, மரங்கள் சூழ்ந்த இடங்களை கட்டிடங்கள் கட்ட அழிப்பது, வனங்களை அழிப்பது போன்ற காரணங்களால் விருட்ச சாபம் உண்டாகிறது.
இதன் விளைவாக வாழ்வில் தீரா கடன்கள், நோய்கள், வாகன விபத்துக்கள் உண்டாகி வாட்டும்.
10. தேவ சாபம் :
--------------------------
முன்னோர்கள் பூஜித்து வந்த தெய்வங்களின் பூஜையை செய்யாமல் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்ந்து பேசுவது, தெய்வ காரியங்களுக்கு உதவாமல் ஏளனம் செய்வது போன்ற காரணங்களால் தேவ சாபம் உண்டாகிறது.
11.ரிஷி சாபம் :
------------------------
உண்மையான ஆசார்ய புருஷர்களை, பக்தர்களை, ஆன்மிக வாதிகளை மதிக்காமல் அவமதிப்பது போன்ற காரணங்களால் ரிஷி சாபம் உண்டாகிறது.

Wednesday, January 06, 2016

முடி

"முடி வளர" சித்த மருத்துவம்..!
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை மருத்துவ முறை அவசியம்"

பக்தி

1.பூக்களை தொடுத்து கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது. அப்படி கட்டியுள்ள பூவை  வாங்காதீர்கள். நீங்களாகவே வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்துகொள்ளுங்கள்.கணவன் மனைவி பிரிவு வராது.
2.செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், மனைவியுடன் சண்டை போடாதீர்கள். பணம் காசு குறைவு ஏற்படும். அதுபோல் மனைவிமார்களும் புருஷனுடன் சண்டை போடக்கூடாது.
3.தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
4.வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும்.
5.அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
6.பொதுவாக பெண்கள் நெற்றிக்கு திலகமிடாமல் ( குங்குமம்) பூஜை செய்யக்கூடாது.
7.பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
8.கர்ப்பிணி ( பிரசவ காலங்களில்) பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது.
9.வீட்டின் நிலைகளில் ( வாசற்காள்கள்) குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
10.நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
11.ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
12.வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்
13.சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
14.யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.
15.பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
16.பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
17.விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
18.ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
19.தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
20.புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
21.தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
22. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
23.வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
24.செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
25. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
26.பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
27.வீட்டில் அரளி பூச்செடி வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் அரளி பூச்செடியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது அரளி தானம் கொடுக்க வேண்டும். அரளியோடு தரப்படாத தானம் வீண்.
28.வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
29.வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
31.நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
32.அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
34.தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
35.சாமி படங்களில் உள்ள உலர்ந்த பூக்களை வீட்டில் வைக்கக் கூடாது

தலையங்கம்


நன்றி..........................தினமணி
அவசியம்தான் இந்தக் கட்டுப்பாடு!
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளிலிருந்து தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வந்திருக்கிறது. இந்த நடைமுறை ஏற்கெனவே நமது அண்டை மாநிலங்கள் மூன்றிலுமே நடைமுறையில் இருப்பவைதான். தமிழகத்திலும் இருந்துவந்த நடைமுறைதான் இவை.
கேரள மாநிலத்திலுள்ள ஆலயங்களில் ஆண்களாக இருந்தால் வேட்டி அணிந்து சென்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முழுக்கால் சட்டை, பைஜாமா உள்ளிட்ட தைக்கப்பட்ட ஆடை எதையும் அனுமதிப்பதில்லை. அதுமட்டுமல்ல, மேல் சட்டை அணிவதும் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களும்கூட தென்னிந்தியப் பாரம்பரிய உடைகளை அணிந்துச் சென்றால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல, திருப்பதி - திருமலை தேவஸ்தானத்திலும் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற நடைமுறைகள் சிறப்பு தரிசனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இறைவழிபாட்டிற்கும் தெய்வத்தின் தரிசனத்துக்கும் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இந்து மதத்துக்கு மட்டுமே இருப்பவை அல்ல. இஸ்லாமியர்களின் தொழுகைக்கு மிக அதிகமான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதேபோல, கிறிஸ்தவர்களுக்கும்கூட பெண்கள் தலையைத் துணியால் போர்த்திக்கொள்வது உள்ளிட்ட சில மாதா கோயில் வழிபாட்டு முறைகள் உள்ளன. சீக்கியர்களுக்கும், பெளத்த மதத்தினருக்கும்கூட இதுபோன்ற சம்பிரதாயங்கள் உண்டு.
இந்து கோயில்களில் ஆண்கள் வேட்டி கட்டுவது, அங்கவஸ்திரம் மட்டுமே போர்த்திக்கொண்டு ஆலயத்திற்குள் செல்வது உள்ளிட்ட நடைமுறைகளுக்குப் பின்னால் சில காரணங்கள் உண்டு. ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை அமைக்க ஆகம விதிமுறைகளோ, இன்ன இடத்தில் இன்ன பிராகாரங்கள் அமைய வேண்டும் என்றோ விதிமுறைகள் கிடையாது. ஏனைய மதங்களைச் சார்ந்தவர்கள் ஒன்றுகூடி பிரார்த்திக்கும் இடமாக மட்டுமே வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. ஆனால், இந்து மதத்தில் அப்படி அல்ல.
இங்கே வழிபாட்டுத் தலங்கள் எனப்படுபவை கூட்டுப் பிரார்த்தனைத் தலங்களாக இல்லாமல், பரிகாரத் தலங்களாகவும் இருக்கின்றன. அவை ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள ஈர்ப்பு சக்தியை மையப்படுத்தி ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டவை. அதனால்தான், இன்னென்ன பிரச்னைகளுக்கு இன்னென்ன குறிப்பிட்ட ஆலயங்களைத் தரிசிப்பது, அங்கே பரிகாரங்களைச் செய்வது போன்றவை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
மேலாடை அணியாமல் செல்லும்போது அந்த ஆலயத்தின் அடிப்படையாகக் கருதப்படும் கிரகத்தின் காந்த சக்தியை முழுமையாக உடலில் வாங்கிக் கொள்ள முடியும் என்பதுதான் இதுபோன்ற விதிமுறைகளுக்குக் காரணம். கோயில்களில் வலம்வருவது, கொடி மரத்துக்கு முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரிப்பது போன்றவையும் இதனால்தான்.
இறை நம்பிக்கை இல்லாத, அன்னிய மோகத்தின் பாற்பட்ட திராவிட அரசியலின் காரணமாக இந்து ஆலயங்களின் வழிபாட்டு முறைகளும், சம்பிரதாயங்களும் கேலிக்கும், பழிப்புக்கும் உள்ளாயின. மேல் சட்டை அணியாமல் ஆலய வழிபாடு என்கிற சம்பிரதாயம் பூணூல் அணிந்த பிராமணர்களையும், அணியாத பிராமணர் அல்லாதவர்களையும் பிரித்தறிந்து பார்ப்பதற்காகத்தான் என்கிற குதர்க்கமான பொய்ப் பிரசாரத்தை புத்திசாலித்தனமாக முன்னெடுத்துச் சென்று அனைவரையும் நம்ப வைத்தனர் அந்த இறை மறுப்பாளர்கள். ஆலயங்களில் மட்டுமல்லாமல் மகான்களையும், துறவிகளையும், வயதில் மூத்தவர்களையும் தரிசிக்கும்போதுகூட மேலாடை அணியாமல் செல்வதன் மூலம் அவர்களிடம் இருக்கும் ஆத்ம சக்தியையும் அருளையும் முழுமையாகப் பெற முடியும் என்கிற பாரம்பரிய நம்பிக்கைக்கும்கூட இதேபோன்ற காரணத்தைக் கூறி பழிக்க முற்பட்டனர்.
கடந்த 70 ஆண்டு கால இந்து மத எதிர்ப்பை (வெறுப்பை) முன்னிலைப்படுத்தும் சக்திகளின் பிரசாரத்தால், இடையில் சிறிது காலம் துவண்டுபோன இறை நம்பிக்கை உணர்வு, இப்போது மிகப்பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது. ஆலயங்களில் முக்கியமான தினங்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் அதற்கு கட்டியம் கூறுகிறது. அதேநேரத்தில், ஆலயம் தொழுவது ஏனைய மதத்தினரிடம் காணப்படும் ஈடுபாட்டைபோல இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது.
அண்மைக்காலமாக இளைஞர்களிடம் புதிய போக்குகள் தோன்றி டி-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ் உள்ளிட்ட நாகரிக ஆடைகளும், பெண்கள் லெக்கின்ஸ், ஸ்கின் டைட் ஜீன்ஸ், டாப்ஸ் உள்ளிட்ட ஆடைகளும் அணிந்து கோயிலுக்கு வரத்தொடங்கியதால், தமிழக ஆலயங்களில் ஆடைக் கட்டுப்பாடு குலைந்தது. நமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை, பாவாடை - தாவணி போன்றவை காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. நமது பாரம்பரியச் சின்னங்களைக் குறைந்தபட்சம், ஆலய வழிபாட்டிலாவது கடைப்பிடிக்க இந்த உடைக்கட்டுப்பாடு நிச்சயமாக உதவும். இறை வழிபாட்டைப் பொருத்தவரை நாம் இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன.
ஆலயங்களில் உடைக் கட்டுப்பாடு என்கிற நல்லதொரு முடிவை நடைமுறைப்படுத்தி இருக்கும் இந்து அறநிலையத் துறையையும், அரசையும் பாராட்டும் அதேநேரத்தில் இன்னும் ஒரு வேண்டுகோள். இதேபோல, கோயிலுக்குள் செல்லிடப்பேசியை அனுமதிப்பதற்கும் தடை பிறப்பிக்க வேண்டும். கோயிலுக்குள் செல்லிடப்பேசி ஒலித்தால் அபராதம் விதிப்பது, செல்லிடப்பேசியில் படம் பிடித்தால் பறிமுதல் செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை ஆடைக் கட்டுப்பாட்டுடன் சேர்த்து அமல்படுத்த வேண்டும்