Monday, August 25, 2014

சித்தம் தெளியவைத்து , பாவங்கள் போக்கும் திருக்கஞ்சனூர் அக்னிபுரீஸ்வரன்.

 


முன்பொரு சமயம் கங்கை நதியின் கரையில் சனகர் முதலிய முனிவர்கள் சத்ரயாகம் என்ற யாகத்தைத் துவங்கினர்.யாக நிறைவின்   போது சூதமா  முனிவர் அங்கு வருகை புரிந்தார்செனகாதி முனிவர்கள் அவரை வணங்கி உபசரித்தனர், அகிலத்தில் அனைத்து பாவங்களையும் போக்க வல்ல கங்கை நதிக்கரை அவருடைய வருகையால் மேலும் புனிதம் பெற்றதாக கூறி வரவேற்றனர்,        அப்போது சூதமா முனிவர் அவர்களிடத்தில் கங்கை நதிக்கரையைவிடவும் சிறப்பு வாய்ந்ததும், எல்லா பாவங்களையும் போக்கி சுகபோகங்களை வழங்கக்கூடியதுமான ஒரு புண்ணிய க்ஷேத்ரம் காவிரி நதியின் வடகரையில் இருக்கிறது எனக்கூறினார்.

முன்பொரு சமயம் ஓடக்காரி ஒருத்தியிடம் மையல் கொண்டு அவளுடன் கூடிக்களித்திருந்ததனால் பராசர முனிவருக்கு சித்த பிரமை ஏற்பட்டது. அவர் அறம் போதிக்கும் சாத்திரங்களை மறந்தார். சுவாதீனம் ,இன்றி சுற்றித்திரிந்தார். அப்போது வானில் இருந்து ஒரு அசரிரீ அவரை காவிரியின் வடகரையில் உள்ள பலாசவனத்தில் சிவனை ஆராதிக்குமாறு ஆனையிட்டது.

அந்த ஆனையை ஏற்று அவர் பலாசவனத்து  பரமசிவனை பூஜித்து வந்தார். அவரது பூஜையின் பயனாய் சிவபெருமான், உமாதேவியோடு தாண்டவக்கோலத்தில் காட்சியளித்து முனிவரின் சித்த பிரமையை நிவர்த்தி செய்தார்.

 

ஆனந்த பரவசமடைந்த பராசரர், பரமசிவன் தினந்தோறும் அபிஷேகம் கொண்டருளும் விதமாக தாண்டவக்கோலத்தில் அத்திருத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க வேண்டுமேன வேண்டினார். இறைவனும் அவ்வாறே அருள்புரிந்து. பராசரருக்கு முக்தியளித்தார்.

அந்தப்புனித்த்தலமே காவிரி வடகரை நோக்கிப்பாயும் பலாசவன க்ஷேத்திரம்! அது திருக்கஞ்சனூர் என்ற  நாமத்தில் அறியப்படுகிறது.    சூதமா முனிவரிடமிருந்து பலாசவனத்தின் சிறப்புகளைப்பற்றி கேள்விப்பட்ட செனகாதி முனிவர்கள் அந்தத்தலத்தை காண ஆவல்  கொண்டனர், சூதமா முனிவர் விடைபெற்றுச்சென்றதும், தம் தவவலிமையினால் அன்றிரவே திருக்கஞ்சனூர் அடைந்தனர்.  அதிகாலையில் காவிரியில் நீராடி ஆலயம் சென்றனர். கற்பவிநாயகரைக்கரம் குவித்து வணங்கினர்.ஆலயத்துள் எழுந்தருளியிருக்கும் அக்னிபுரீஸ்வரரை பலவிதமாய் போற்றித்தாள் பணிந்து தொழுதனர்.

 

அப்பொழுது செம்பொன்நிறத்துடன் சூர்யோதயம் நிகழ்ந்தது. தேவர்கள் பூமாரிப்பொழிய, கற்பகாம்பாள் சமேதரராய் அக்னீசப்பெருமான் காட்சி தந்தார். தம்மை தரிசித்த முனிவர்கள் ஆயிரம் சத்ரயாகம் செய்த பலனை பெறுவார்கள் என அருள் புரிந்தார்.

சிவத்தலங்களில் மூர்த்தி,  தலம்,  தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புப்பெற்றது திருக்கஞ்சனூர் திருத்தலம். இத்தலத்தில் ஒருநாள் செய்யப்படும் யாகம் ஆயிரம் சத்ர யாகங்கள் செய்வதற்கு ஒப்பாகும்.  இங்கே காவிரி தெற்கிலிருந்த வடக்கு நோக்கி பாய்ந்து உத்ரவாஹினி எனும் வடகாவேரியாக ஓடுகிறது. இந்த நதியில் ஒருமுறை நீராடினால் கங்கை நதியில் பன்னிரண்டு ஆண்டுகள் நீராடிய பலன் கிடைக்கும்.

 

தெற்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது, அக்னீஸ்வரர் திருக்கோவில்.  கிழக்கு நோக்கி எழுந்தருளியிள்ள அக்னீஸ்வரருக்கும், கற்பகாம்பிகைக்கும் தனித்தனித்திருச்சுற்றுகளுடன் உற்சவ மண்டபம், அலங்கார மண்டபம், பதினாறு கால் மண்டபம் ஆகியவற்றுடன் சேர்ந்து ஒரு பெரிய திருச்சுற்றாக மூன்று பிரகாரங்களுடன் கூடிய திருக்கோயில்.   ராஜகோபுரத்திற்கு வெளியில் தெற்கு நோக்கிய கற்பக விநாயகர்  திருக்கோயிலும், சன்னதித்தெருவில் கிழக்கு நோக்கி  ஹரதத்தர் ஆலயமும் அமைந்துள்ளன. ஹரதத்தருக்கு உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி, புல்லுண்ட நந்தி ஆகிய மூர்த்திகளும் கொழு வீற்றிருக்கும் சிறப்புப்பெற்ற திருக்கோயில்.

சபா மண்டபத்தில் கற்சிலையிலான திருமேனியோடு நடராஜப்பெருமானும்சிவகாமி அம்மையும் வீற்றிருக்கின்றனர்.   இப்பெருமானுக்கு நாள்தோறும் அபிஷேகம் நடைபெறுகிறதுமற்ற ஆலயங்களில் நடராஜப்பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிஷேகம்  நடைபெறும்.

தேவர்களாளும், முனிவர்களாளும்  போற்றி வழிபடப்பட்ட திருக்கஞ்சனூர் , சுக்கிரதோஷ நிவர்த்தித்தலமாகவும் அமைந்துள்ளது.   அக்னீஸ்வர சுவாமி சன்னதி மஹா மண்டபத்தில் சுக்கிர பகவான், கிழக்கு நோக்கி தனிச்சன்னதி கொண்டு எழுந்தருளியுள்ளார்.    திருநாவுக்கரசரால் மதிசூடும் பெருமான் எனப்போற்றப்படும் இப்பெருமானே சுக்கிர கிரஹதோஷ பரிகார மூர்த்திபிரம்ம தேவரின் மானசபுத்திரரான பிருகு முனிவருக்கும் , புலோமசை என்பவளுக்கும் மகனாகப்பிறந்தவர். இவருக்கு பார்கவன் என்ற பெயருண்டுசுக்கிர பகவான் மிகச்சிறந்த சிவபக்தர். சிவபெருமான் அருளாள் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றவர்.http://athavannews.com/wp-content/uploads/2014/04/Tamil-Daily-News-Paper_92307245732.jpg

அசுரர்களின் குரு, மஹாபலிச்சக்கரவர்த்தியிடம் திருமால் வாமனராக வந்து மூன்றடி மண்  கேட்டபொழுது , சுக்ராச்சார்யார் அவ்வாறு மூன்றடி மண் கொடுக்க வேண்டாம்  எனத்தடுத்தார். மஹாபலி அதைக்கேளாமல் நீர் வார்த்துக்கொடுக்க முனைந்தபோது, நீர் வார்க்கும் கெண்டியின் மூக்கினுள்  சுக்கிரர் வண்டாக உருவெடுத்து நுழைந்துகொண்டு, நீர் வராமல் அடைத்துக்கொண்டார்.   அப்பொழுது மஹாபலி தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்கினுல் செறுக, அது சுக்கிரரின் ஒரு கண்ணில் குத்தியது, அதனால் சுக்கிரர் ஒரு கண் இழந்தவரானார்.                         வாமனர் ஒரு தர்ப்பைப்புல்லால் கெண்டியின் மூக்கினுள் செருக, அது சுக்கிரரின் ஒரு கண்ணில் குத்தியது எனவும் அதனால் சுக்கிரர் ஒரு கண்ணை இழந்தார் எனவும் சொல்லப்படுவதுண்டு

இராஜராஜேஸ்வரியை பூஜித்து வருவதாலும், வைரக்கல்லை தரித்துக்கொள்வதாலும், வெள்ளை நிற வஸ்திரத்தையும், வெள்ளியையும், மொச்சை தானியத்தையும் தானம் கொடுப்பதாலும், வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதாலும் சுக்கிர கிரஹதோஷங்கள் நிவர்த்தியாகும்.

 

திருத்தலக்குறிப்புகள்

தலத்தின் பெயர் : திருக்கஞ்சனூர்

சுவாமியின் திருநாமம்  :  ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர், சுக்கிரன்,

எங்கே உள்ளது :  தமிழ்நாட்டில், கும்பகோணத்தில்

எப்படி செல்வது : சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும்  ரயில்,பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம், கும்பகேணத்திலிருந்து பேருந்து, கார்,மற்றும் ஆட்டோ மூலம்  திருக்கஞ்சனூர்  செல்லலாம்.

எங்கே  தங்குவது  :   கும்பகோணத்தில் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும்  உள்ளன.

தரிசன நேரம்  :   காலை  6.30 மணி முதல்  12.30 மணி வரை

              மாலை 4.00 மணி முதல் இரவு 8.00

 

கோயில் முகவரி

செயல் அலுவலர்,

அக்னிபுரீஸ்வரர் திருஙக்கோயில்

கஞ்சனூர் அஞ்சல், துகிலி வழி,

தஞ்சை மாவட்டம் -609 804

                                      தொலைபேசி  0435 – 2473737

No comments: