Saturday, August 23, 2014

அஞ்ஞானம் அகற்றி நல்ஞானம் நல்கும் ஆலங்குடி ஆபத்சகாயர் மற்றும் குரு பகவான்


காவிரி நதியின் தென்கரையிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருக்கும் திருஇரும்பூளை என்னும் பாடல் பெற்ற தலம் பலவகைகளிலும் சிறப்புடையது,

தேவர்கள் அமுதம் கடைந்த போது  வெளிப்பட்ட விஷத்தினால் அவதியுற்று ஆண்டவனை வழிபட, ஆலமாகிய விஷத்தைக் குடித்துக் காத்தமையால் இத்தலத்துக்கு ஆலங்குடி எனவும் இறைவனுக்கு ஆபத்சகாயர் எனவும் பெயர் வழங்கப்படுகிறது. இந்த ஊரில் அரவு தீண்டி மரித்தவர் இல்லை. கஜமுகாரசுனால் தேவர்களுக்கு நேர்ந்த இடுக்கண்களைக் காத்த விநாயகர் எனப் பெயர்உண்டாயிற்று. குரு கிரக தோஷ நிவர்த்திக்கும் இது ஒரு சிறந்த  பரிகாரத்தலம் !

கைலாயத்தில் பார்வதி பாங்கியரோடு பந்தாடிய போது உயரே சென்ற பந்தைப் பிடிக்கக் கையை உயரத் தூக்கி பந்தை எதிர்பார்த்து நிற்க வான வீதியில் சென்ற சூரியன்  தன்னை நிற்கச் செய்வதாக்க் கருதித் திகைத்து தேரை நிறுத்தினான். அவன் தொழில் தடைபட்டது. அவனி அவதியுற்றது.

அல்லலுற்றவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சினம் கொண்ட சிவனும்  ஒரு கனமும்   யோசிக்காமல் பார்வதிக்கு சாபமிட்டார். அந்த சாபத்தின் காரணமாக, காசினியில் காசியாரண்ய தலத்தில்  பார்வதி அம்மை அவதரித்தாள்இங்கு தவம் இயற்றி இறைவனைத் திருமணம் செய்து கொண்டால்பார்வதி பரமேஸ்வரன் திருமணம் நடந்த இடத்திற்கு இன்று திருமண மங்கலம் எனப் பெயர் வழங்கப் பெறுகிறதுஅன்னையின் திருமணத்திற்கு வருகை புரிந்த திருமால், பிரம்மா, இலக்குமி, கருடன், அஷ்டதிக்கு பாலகர், ஐயனார், வீரபத்திரர், முதலானோர் இத்தலத்தில் தத்தம் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்து வழிபட்டனர்.

உயரமான மதில்களால் சூழப்பெற்று ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம்  அழகாக காட்சியளிக்கிறது. கோயிலில் நுழைந்ததும் கலங்காமல் காத்த விநாயகர் தரிசனம்  நல்குகிறார். அவரை வணங்கி உள்ளே நுழைந்தால் முதல் பிராகாரம்  எதிரில் சுக்கிரவார அம்மன் சந்நிதி

http://img1.dinamalar.com/Kovilimages/T_500_1476.jpg

அருகிலேயே  உமையம்மை என்றும் ஏலவார்  குழலியம்மை என்று ஏற்றமுடன் அழைக்கப்பெறும் அன்னையின் தெற்குநோக்கிய சந்நிதி   அமைந்துள்ளது. அம்மன் சந்நிதி  தனியான சுற்றுப் பிரகாரத்தில் உள்ளது.    இரண்டாம் வாயிலைக் கடந்து உள்ளே செனறால் தெற்கு உட்பிரகாரத்தில் நால்வர்  சப்த லிங்கங்கள், காசி விசாலாட்சி, அகத்தியர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.

மேற்குப் பிரகாரத்தில்  முருகன், வள்ளி, தேவசேனை சந்நிதியும், இலக்குமி இருப்பிடமும், வடக்கு உட்பிரகாரத்தில் நவ கிரகம், சபாபதி, சிவகாமி அம்மை, சம்பந்தர், அப்பர் மணிவாசகர் முதலியோரும் காட்சி தருகிறார்கள்கிழக்கு உட்பிரகாரத்தில் பைரவர்,சந்திரன் சந்நிதிகள் அமைந்துள்ளன.

சுவாமி மகா மண்டபத்தில் நந்தி, பலிபீடம் கருவரையில் கிழக்கு நோக்கி ஆபத்சகாயரும், அர்த்த மண்டபத்தில் பள்ளி அறை சொக்கரும், போக சக்தி அம்மையும் உள்ளனர்.

http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-58/guru.jpg

தெற்கு கோஷ்டத்தில் இத்தலத்துச் சிறப்பு மூர்த்தியாக  குரு தட்சினாமூர்த்தி எழுந்தருளியிருக்கிறார்பல தலங்களையும் தரிசித்து, இந்தத் தலத்துக்கு வந்து கொண்டிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொன்னி நதிபொங்கும் புனலுடன் சுழித்துச் சுழித்து வெள்ளக்  கடலாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தால் கரையில் அடியார்களுடன் மனம் கலங்கி நின்றார்அந்தச் சமயத்தில் காசியாரண்யேஸ்வரராகிய ஆபத்சகாயர் ஓடக்காரனாக  வந்துஅக்கரைக்குக் கொண்டுவிடுவதாகச் சொல்லி பவுன்கள்  பெற்று  முதலில் அடியார்களில் சிலரை  அக்கரை கொண்டு சேர்த்தார்.

மீண்டும் சுந்தரரிடம் போய் அவரை ஏற்றி வருகையில்நடு ஆற்றில் சுழல்  ஏற்படும்படி ஈசன் ஒரு திருவிளையாடல் புரிந்தார். ஆற்றுச் சுழலில் சிக்கி படகு சுழன்றது  . ஓடக்காரனின் கையில்  இருந்து பற்றுக் கோல் நழுவியதுஅந்தக் கோலை எடுப்பதைப்  போல்  பாசாங்கு செய்த ஓடக்காரன் நிலை தடுமாறி தண்ணீரில்   விழந்து தத்தளித்தான்படகில் இருந்த சுந்தர மூர்த்தி  நாயனார் இறைவனை   வேண்ட ஓடம் சிறிது தூரம் சென்று பாறையில் மோதி நொறுங்கியது. அந்தச் சமயத்தில் சிவபெருமான் ரிஷபாரூடராகத் தோன்றி யாவரையும் தூக்கிக்காப்பாற்றியதாக வரலாறு வழங்குகிறது,  பின்பு சுந்தரர் இந்த தலத்துக்கு வந்து முறைப்படி வணங்கி வழிபட்டு தட்சிணாமூர்த்தியை தரிசித்து ஞானோபதேசம் பெற்றார்,

திருவாரூரில் ஒருசமயம் நடைபெற்ற விழாவில் அப்பொழுது அரசாண்ட ஈசசோழ அரசன், எல்லாத்தலங்களிலும் உள்ள சுந்தரமூர்த்தி திருவுருவங்களை கொண்டுவந்து விழா நடத்தினான், எல்லா சுந்தரமூர்திகளையும்விட  ஆலங்குடி சுந்தரர் திருவுருவம் அவர் மனதைர்ந்தது, அதை திருவாரூரிலேயே வைக்க வேண்டும் என்று விரும்பினான்.

அதை அறிந்த ஆலங்குடி சிவாச்சாரியார்கள் சுந்தர மூர்த்தி  திருவுருவை, குழந்தைக்கு அம்மை  போட்டிருப்பது போல் தொட்டில் கட்டி ஆலங்குடி கொண்டுவந்து சேர்த்தார்கள். அந்த அம்மை தழும்புகளை இன்றும் இங்கே எழுந்தருளியிறுக்கும் சுந்தர மூர்த்தி பெருமாள் மீது காணலாம்.

இந்தத்தலத்தில் உள்ள குரு மூர்த்தியை குருவாரத்தில் விணங்கி வழிபடுவோர்க்கு சிவஞானம் எளிதில் கைகூடும்.

வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தி  விசேஷ தரிதன விழா நடைபெறுகிறது. குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொருராசிக்குப் பிரவேசிக்கும் காலங்களில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனையும்  நடைபெறும்.   சித்திரை மாதம் பௌர்மி  அன்று தொடங்கி பத்து நாட்கள் உற்சவ விழாவும், தக்ஷிணாமூர்த்திக்குத் தேர்த்திருவிழாவும் கொண்டாடப்படுகின்றன.

 

திருத்தலக் குறிப்புகள்:
 

தலத்தின் பெயர்:    ஆலங்குடி
 
சுவாமியின் திருநாம் :    ஆபத்சகாயர், குரு தக்ஷிணாமூர்த்தி.

எங்கே உள்ளது :   தமிழ்நாட்டில்,குடந்தையில் இருந்து பதினேலு கி.மீ, தொலைவில்.

எப்படிச் செல்வது :   சென்னையிலிருந்தும் கோவையிலிருந்தும் கும்பகோணத்துக்கு ரயில் பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம்.  கும்பகோணத்தில் இருந்து பேருந்து கார் மற்றும் ஆட்டோ  மூலம் ஆலங்குடி சென்றடையலாம்.

எங்கே தங்குவது :  கும்பகோணத்தில் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும்  உள்ளன.

தரிசன நேரம் :    காலை 6.00  முதல்  12.00  வரை
             மாலை 4.00  முதல்  9.00  வரை

கோயில் முகவரி :
நிர்வாக அலுவலர்,
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,  
ஆலங்குடி 612 801.
தொலைபேசி : 04374  269407.

No comments: