Monday, March 07, 2016

சிவாலய ஓட்டம் 12 திருத்தலங்கள்!

வி.ராம்ஜி
குமரி மாவட்டத்தில், சிவாலய ஓட்டத்தில் தரிசிக்க வேண்டிய 12 கோயில்களில், முதல் நான்கு ஆலயங்களைப் பார்த்தோம். அடுத்த 8 ஆலயங்கள்...
5. பொன்மனை: சுமார் 7 கி.மீ. தொலைவு. தீம்பிலான்குடி மகாதேவர் ஆலயம் வெகு பிரசித்தம். இங்கு, கிழக்கு முகமாக சிவனார் அருள்புரிகிறார். அடுத்து பன்றிப்பாக தரிசனம்!
6. பன்றிப்பாகம்: சுமார் 11 கி.மீ. தொலைவு. இயற்கைச் சூழலில் அமைந்துள்ள  பன்றிப்பாகம் ஆலயத்தில், சிவலிங்கப் பிரதிஷ்டையுடன் விநாயகர் மற்றும் நாகராஜாவுக்குத் தனிச் சந்நிதிகள் உள்ளன. தரிசனத்துக்குப் பிறகு, பக்தர்கள் கல்குளம் நோக்கிச் செல்கின்றனர்.
7. கல்குளம்: பன்றிப்பாகத்திலிருந்து 6 கி.மீ. தூரம் ஓடி, புகழ் பெற்ற பத்மனாபபுரம் கோட்டைக்குள் அமைந்துள்ள கல்குளம் நீலகண்டேஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.
இங்கு ஆதிமூல மூர்த்தியாக, 10 அடி உயர சிவலிங்கம் உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்த்து வியந்த மார்த்தாண்டவர்மா மகாராஜா, தமிழக ஆலய அமைப்பின் சாயலில், முன்புறம் அழகுமிக்க கோபுரத்துடன் இந்த ஆலயத்தைக் கட்டியதாகக் கூறுகின்றனர். அடுத்து,  மேலாங்கோடு தரிசனம்.
8. மேலாங்கோடு: சுமார் 3 கி.மீ. தொலைவு. மேலாங்கோடு இசக்கியம்மன் ஆலயம், பத்மனாபபுரம் கோட்டை ஆகியவையும் அருகில் உள்ளன. இதையடுத்து திருவிடைக்கோடு நோக்கி தொடரலாம்.
9. திருவிடைக்கோடு: சுமார் 5 கி.மீ. தொலைவு. மேற்கு நோக்கி அமைந்துள்ள ஆலயம். கேரள- தமிழக கட்டடக் கலை பாணிகளைக் கொண்டு கட்டப்பட்டது. அடுத்து திருவிதாங்கோடு தரிசனம்.
10. திருவிதாங்கோடு: சுமார்  8 கி.மீ. தொலைவு. சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு இங்கே தனிச் சந்நிதிகள் உள்ளன. ஆலய மண்டபத் தூண்களில் கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.அடுத்து திருப்பன்றிக்கோடு.
11. திருப்பன்றிக்கோடு:  சுமார் 9 கி.மீ. தொலைவு. பள்ளியாடி அருகில் உள்ள ஆலயம். ஆலய விமானத்தில் நரசிம்ம மூர்த்தி, ஐயப்பன் சிலைகள் உள்ளன. சிவன்,- நந்தி இருவரும் முறையே வேடன் &  பன்றியாக உருமாறியதும், அந்தப் பன்றியை வேட்டையாடும்பொருட்டு சிவனுடன் அர்ஜுனன் போர்புரிந்த இடமும் இது என்கிறது புராணம்! பிறகு, திருநட்டாலம்.
12. திருநட்டாலம்: திருப்பன்றிக்கோட்டிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரம் ஓடி, திருநட்டாலத்தில் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்யவேண்டும்!
இந்தக் கோயிலில், ஸ்ரீசங்கரநாராயணர் எனத் திருநாமம் விஷ்ணுவுக்கு! 12-வது ருத்திராட்சம் விழுந்த இங்கு, வியாக்ரபாதர் இந்த ஆலயத்தை அமைத்தாராம்! இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, சிவபெருமானையும் சங்கரநாராயணரையும் தரிசித்துத் திரும்பலாம்!

கோவிந்தா... கோபாலா...
தென்னாடுடைய சிவனே போற்றி!

No comments: