Monday, March 07, 2016

சிவனே போற்றி! சிவராத்திரியே போற்றி!

வி.ராம்ஜி
மகா சிவராத்திரி! ஆதியும் இல்லாத அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியனாய்,  பிரமாண்டமாக லிங்க வடிவெடுத்து வெளிப்பட்ட நாளே மகா சிவராத்திரி. மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் அற்புதமான நாள் இது.
உலக மக்கள் யாவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்பதற்காக, சிவனாரையும் உமையவளையும் வணங்கித் தொழவேண்டிய தினம். உலகம்மை, உலக மக்களுக்காக, சிவனாரை பூஜித்த திருநாள் இது!
பிரபஞ்சத்துக்கு பிரளயம் மிகவும் அவசியம். அப்போது உலகம், சிவனாரிடம் ஒடுங்கும். அப்படிப் பிரளய நாளில்... ஒடுங்கும் தருணமே சிவராத்திரி என்கிறது புராணம். அந்தநாளில் ஈசனைத் தவிர எவரும் இல்லை. அதேநேரம் சிவனாரில் பாதியான சக்தியும் உடனிருந்தாள் என்பதாகத் தெரிவிக்கிறது புராணம்!
இந்த நாளில்... முறைப்படி விரதம் இருந்து சிவனாரை வழிபடுவோம். சகல வளங்களையும் பெறுவோம்!
'இந்த நாளில் விரதம் இருந்து, விடிய விடிய கண் விழித்து, நான்கு கால பூஜையையும் தரிசிப்பவருக்கு முக்தி தரவேண்டும்!' என பார்வதி தேவி சிவனாரிடம் கேட்க, 'அப்படியே ஆகட்டும்' என வரம் தந்தருளினார் ஈசன்! எனவே, மற்ற நாளை விட, மகா சிவராத்திரி நாளில் செய்யப்படும் பூஜை பன்மடங்கு பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம்!
  சிவராத்திரி மகிமையை சிவனாரே நந்தியம்பெருமானுக்கு உபதேசித்தார். பின்னர் நந்திதேவர் சிவகணங்கள் அனைவருக்கும் முனிவர்களுக்கும் ரிஷிகளுக்குமாக உபதேசித்தார்.
இத்தனை மகிமைகள் கொண்ட சிவராத்திரி விரதத்தை, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஆதிசேஷன், ஸ்ரீசரஸ்வதி முதலான கடவுளரும் மேற்கொண்டனர். சிவ தரிசனம் செய்து சிவனருளைப் பெற்றனர்!
MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 9865442911 as MyTemple and send "Hi" on Whatsapp for a free subscription in தமிழ். www.mytempleapp.com

No comments: