Monday, March 21, 2016

பங்குனி உத்திரம் மங்காத செல்வம் தரும் பங்குனி!



   மங்கலங்கள் நிறைந்த மாதம் பங்குனி. மலைமகளை சிவனார் மணம் புரிந்த மாதம். ஆயிரம் பசு மாடுகளை தானம் செய்த புண்ணியத்தைத் தருகிற மாதம். தடைகளை நீக்கி வெற்றியை அருளும் மாதமும் இதுவே!
அரங்கனை விபீஷணர் பெற்ற மாதம். திருஅரங்கர், திருஅரங்கத்தை அடைந்த மாதம். பக்தர் பலர் காவடி எடுத்துப் பழநி தரிசனத்துக்குச் செல்லும் மாதம்... எனப் பல மகிமைகள் கொண்டது இந்த பங்குனி மாதம்!
விஜயா ஏகாதசி:
எந்த விதத் தடைகள் வாழ்வில் இருந்தாலும் அதை நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி மாதத் தேய்பிறையில் வருவது இது. கோரிக்கைகளை நிறைவேற்றி, பலன்களை அளிப்பது இந்த விஜயா ஏகாதசி.
  வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து முறைப்படி வழிபட வேண்டும்.
   மறு நாள் துவாதசி அன்று, சாது அல்லது அடியவர் அல்லது ஏழைக்கு உணவு அளித்து, பூஜை செய்த கலசத்தையும் தானியங்களையும் அவருக்குத் தர வேண்டும். அதன் பிறகு விரதத்தை பூர்த்தி செய்து, சாப்பிடலாம் என்கிறார் பாலாஜி குருக்கள்!
'இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது?' என்று ஸ்ரீராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீராமர், சீதையை மீட்டு வந்தார் என ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.
7022638881 a free subscription in தமிழ்.

No comments: